90. தூயவர்
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான அரசர்களுடைய போராட்டங்கள் முடிந்து, அரசியல் போராட்டங்கள் தொடங்கியபின் வந்த இரண்டாம் தலைமுறைத் தலைவர் கோகலே. ஆசிரியராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, அரசியலுக்குள் நுழைந்து, ஆகர்கரிடமும் ரானடேவிடமும் பயிற்சி பெற்று, கடிதங்கள், கட்டுரைகள், பொதுக் கூட்டங்கள், சட்டப் பேரவை உரைகள், ஆட்சியாளர்களுடனான உரையாடல்கள், பேச்சுவார்த்தைகளின்மூலம் இந்தியாவுக்கான உரிமைகளைப் படிப்படியாகக் கோரிப் பெறமுடியும் என்று உறுதியாக நம்பியவர் அவர்.
கோகலேவின் வாழ்க்கையின் சாறு என்று பார்த்தால், நான்கு விஷயங்கள் மேலெழுந்து நிற்கின்றன:
முதலில், எதையும் மேம்போக்காகப் பார்க்கக்கூடாது, ஆழச் செல்லவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும், அதனுடன் தொடர்புடைய மற்ற விஷயங்களையும் கற்கவேண்டும், அதன் அடிப்படையில் தீர்வுகளை உருவாக்கவேண்டும். எப்போதும் தரவுகளின் அடிப்படையில் பேசவேண்டும். வெறும் குற்றம் சாட்டுதலைவிட, புலம்புவதைவிட, தீர்வுகளை முன்வைப்பது சிறப்பானது. அதிலும் பிடிவாதம் காட்டாமல் முதலில் சிறிய பலன்களைப் பெற்றுக்கொண்டு படிப்படியாகக் கூடுதல் நன்மைகளை உரிமையுடன் கேட்டுப் பெறுவது இன்னும் சிறப்பானது. இதையெல்லாம் கோகலே பாடமாகச் சொல்லவில்லை, தன்னுடைய ஒவ்வோர் அசைவிலும் வாழ்ந்து காட்டினார், நம்மைவிடப் பல மடங்கு ஆற்றலுடன் உயர்ந்து நிற்கிற ஆட்சியாளர்களிடம் எப்படித் தன்மானத்தோடு பேசவேண்டும், எப்படி நமக்குரியவற்றைக் கோரிப் பெறவேண்டும் என்று புரியவைத்தார்.










நாள்தோறும் படிக்க முடியவில்லையென்றாலும் நேரம் அமையும் பொழுதெல்லாம் இந்தத் தொடரைப் படித்திருக்கிறேன்.ஆசானின் வாழ்க்கை வரலாறு எனக்குள்ளும் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.எந்த ஒரு பிரசினை என்றாலும் அமைதியாக அதனை ஆராய்ந்து,அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்கும் உந்துதல் தோன்றியிருக்கிறது.நான் முக்கியமில்லை செய்யும் செயல்தான் முக்கியம் எனும் எண்ணம் கைகூடி வரும்போது மன இறுக்கம் குறைந்து அமைதி திரும்புவதை அறிகிறேன்.அதேபோல் எந்த ஒரு காரியத்தையும் முன் தயாரிப்புகளோடு தொடங்கினால் வெற்றிகான விகிதம் அதிகரிக்கிறது.இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.தொடரை எழுதிய சொக்கனுக்கும்,வெளியிட்ட ஆசிரியர் பா.ராகவனுக்கும் மிக்க நன்றி!