சென்ற வாரம் சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனம் புதிய பிரவுசர் ஒன்றினை வெளியிட்டது. இதன் பெயர் அட்லஸ். தற்போது இது மேக் கணினிகளில் மட்டுமே இயங்கக்கூடியது. விண்டோஸ், லினக்ஸ் கணினிகள், திறன்பேசிகளுக்கான செயலிகளாக அட்லஸ் பிரவுசர் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக நாம் இணையதளங்களைப் பார்க்கப் பயன்படுத்தும் குரோம் போன்ற பிரவுசர்களைப் போலல்லாது இந்த அட்லஸ் பிரவுசர் வித்தியாசமானது. இதன் அடித்தளமாக சாட்ஜிபிடி செய்யறிவு உள்ளது. இதே போலச் செய்யறிவினை அடித்தளமாகக் கொண்ட பிரவுசர்கள் ஏற்கெனவே வெளிவரத் தொடங்கிவிட்டன. உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்னால் பெர்ப்ளெக்சிட்டி நிறுவனமும் இதே போன்று ‘காமெட்’ எனும் பிரவுசரை அறிமுகப்படுத்தியது. இதே போல DIA எனும் பிரவுசரும் சில மாதங்களுக்கு முன்னர் சந்தைக்கு வந்தது.
முதலில் பிரவுசர் என்றால் என்னவென்று பார்ப்போம். இணையத்தில் உலா வருவதற்குத் தேவையான ஒரு மென்பொருள்தான் பிரவுசர். ஒரு இணையதளத்தைப் பார்வையிட வேண்டுமானால் நமக்கு ஒரு பிரவுசர் தேவை. இதற்காக எத்தனையோ பிரவுசர்கள் உள்ளன. ஆனாலும் உலகெங்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் பிரவுசர், கூகுளின் குரோம். அடுத்து ஆப்பிளின் சஃபாரி. பிரவுசர்கள் பயன்பாட்டில் குரோம் 71.77%, சஃபாரி 13.9% உள்ளதாகத் தற்போதைய பிரவுசர் மார்க்கெட் புள்ளிவிவரம் சொல்கிறது.















Add Comment