ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடைப்பட்ட பகுதி காக்கேசியா. அதில் கருங்கடலுக்கும், காஸ்பியன் கடலுக்கும் இடையில் இருக்கும் இரு நாடுகள் அர்மேனியா மற்றும் அசர்பைஜான். அந்த இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதி தான் நாகோர்னோ – கராபாக் நிலப்பகுதி. நான்காயிரத்து நானூறு சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட இடம். காடுகளும் மலைத்தொடர்களும் நிறைந்த பகுதி.
கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் (செப்டம்பர் 19), தாக்குதல் நிகழ்த்தப்பட்டது அங்கு தான். தாக்கியது அசர்பைஜான். குறிவைத்தது, ஆர்ட்சாக் குடியரசுப் படையினரை- அசர்பைஜான் பாஷையில், பூர்விக அர்மேனிய பிரிவினைவாதிகள். போர் தொடுப்பதற்குக் காரணம் வேண்டுமே, யோசிக்க நேரமில்லை, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்று சொல்லிவைப்போம். உறுதியாக இருந்தது அசர்பைஜான்.
‘எதிரிகள் பணியும் வரை தாக்குதல் தொடரும்’ என்று சூளுரைத்து விட்டுத்தான் ஆரம்பித்தார்கள். சொற்ப அளவே இருந்த பூர்வீக அர்மேனியக் குழுவினரால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. ஆயுதங்களைத் துறந்து பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டனர். ரஷ்ய அமைதிக்குழு முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சில், இருதரப்பின் சார்பாகவும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முதல்கட்டச் சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
Add Comment