48. ஜியா
ஓர் ஆட்சி சரியில்லை அல்லது மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அடுத்தத் தேர்தலில் ஓட்டை மாற்றிப் போட்டு ஆட்சியாளர்களை மாற்றுவது நமது வழக்கம். நாடாளுமன்ற ஜனநாயகம் தரும் சௌகரியத்தால், ஆளும் கட்சிக்கு அவையில் உள்ள பெரும்பான்மை குறைந்தால் ஆட்சி மாற்றம் நடக்கலாம். இந்த இரண்டைத் தவிர இன்னொன்றை நாம் கண்டதில்லை.
ஆனால் பாகிஸ்தான் அப்படியல்ல. ஆட்சி மாற்றம் என்பது பெரும்பாலும் அங்கே ராணுவத்தால் தீர்மானிக்கப்படும். உளவுத் துறையால் தீர்மானிக்கப்படும். இரு தரப்பும் சேர்ந்தோ, தனித்தனியாகவோ செயல்பட்டு ஆட்சியைக் கலைப்பார்கள். ஆட்சி கலைந்தால் ராணுவ ஆட்சி வரும். முதல் ஒரு வருடம் சர்வாதிகாரி ஒருவர் அனைவரையும் மிரட்டி பயமுறுத்திக்கொண்டிருப்பார். ஒரு வருடம் ஆனதும் அவர் ஜனநாயகவாதியாகிவிடுவார். தேர்தல் நடத்துவார். பிழைப்பு நடக்க வேண்டும் அல்லவா?
ஜுல்பிகர் அலி புட்டோ, ராணுவப் பின்னணி இல்லாதவர். ஆனாலும் சர்வாதிகாரி. யாரானால் என்ன? மக்களுக்குப் பிடிக்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை. ராணுவத்துக்கும் பிடிக்கவில்லை. தீர்ந்தது விஷயம். அன்றைய ராணுவத் தளபதி ஜெனரல் ஜியா உல் ஹக் பெரிய நாடகக் காட்சிகள் ஏதுமின்றி, மிகவும் எளிமையாக புட்டோவைப் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்துக் கைது செய்தார். பாகிஸ்தானின் அதிபராகத் தன்னைத்தானே நியமித்துக்கொண்டு, அந்நாடு அதுவரை காணாத ஒரு புதிய ஆட்சி முறையை அறிமுகப்படுத்த ஆரம்பித்தார்.










Add Comment