Home » நீ வேறு, நான் வேறு – 49
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 49

49. வினோத ரச மஞ்சரி

தெளிவாகப் பகுத்து ஆராய்ந்து எடுக்கப்படும் முடிவுகள் வேறு; சூழ்நிலைகளின் உந்துதலால் மேற்கொள்ளப்படும் முடிவுகள் வேறு. பலூசிஸ்தான் விஷயத்தில் ஜியா உல் ஹக் எடுத்த முடிவு அம்மக்களுக்கு அப்போதைக்கு நிம்மதி அளித்ததை மறுக்க முடியாது. அவர்கள் ஜியாவுக்கு நன்றி சொன்னார்கள். ஒப்பீட்டளவில் மற்ற பாகிஸ்தான் தலைவர்கள் அனைவரைக் காட்டிலும் அவரே சிறந்தவர் என்று சொன்னார்கள். அவரது ஆட்சிக்காலம் நீடிக்கும் வரை ஆயுதம் ஏந்துவதில்லை என்று ஒருமனதாக முடிவு செய்து அதை அறிவிக்கவும் செய்தார்கள். சொன்னதோடு நிற்கவில்லை. செயல்படுத்தியும் காட்டினார்கள்.

இவற்றை மட்டும் முன்வைத்து ஜியா உல் ஹக் ஒரு சிறந்த அதிபர் என்று சொல்லிவிட முடியாது. சார்பற்று சிந்தித்துப் பார்த்தால் பாகிஸ்தான் இன்று அனுபவிக்கும் பெரும்பாலான துயரங்களின் ஊற்றுக்கண் அவரது ஆட்சிக்காலத்தில் திறந்து வைக்கப்பட்டவைதாம். அவருக்கு முந்தைய ஆட்சியாளர்களும் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்றாலும் ஜியாவின் தீவிர அடிப்படைவாத மனோபாவம், மிகத் தீவிரமான சர்வாதிகார மனப்பான்மை இரண்டும் பாகிஸ்தான் என்ற தேசத்தின் காலில் சுற்றிக் கட்டிய இரும்புக் குண்டுகளாக விளங்கின.

ஜியா, ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்தவர். எல்லா ராணுவ சர்வாதிகாரிகளுக்கும் எப்போதும் இருக்கும் பாதுகாப்பின்மை சார்ந்த அச்சம் அவருக்கும் இருந்தது. எனவே அவர் யாரையும் நம்ப மாட்டார். யார் சொல்வதையும் கேட்கவும் மாட்டார். தனது ஆட்சியை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிகளுள் ஒன்றுதான் பலூசிஸ்தானில் இருந்து ராணுவத்தைத் திரும்பப் பெற்றது. இதற்குச் சில உள் அடுக்குக் காரணங்களும் உண்டு. அவை மிக மிக நுணுக்கமானவை.

ஜியா ஆட்சிக்கு வந்தது, ஜூலை 1977 ஆம் ஆண்டு. அடுத்த பதினொரு ஆண்டுக் காலம் அவர் பாகிஸ்தானின் அதிபராக இருந்தார். அவர் பொறுப்பேற்றிருந்த சமயத்தில் ஆப்கனிஸ்தானில் உள்நாட்டுப் போர் மெல்ல மெல்லத் தீவிரம் கொள்ளத் தொடங்கியிருந்தது. எழுபதுகளின் தொடக்கம் முதலே ஆப்கனில் தன் வலையை விரித்து, வளைத்து வைத்திருந்த சோவியத்துக்கு எதிராக முஜாகிதின்கள் போராட ஆரம்பித்து, அது சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த நேரம் அது. அமெரிக்க-சோவியத் பனிப்போரின் ஒரு பகுதியும் பெரும் பகுதியும் அப்போது ஆப்கனிஸ்தானில்தான் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு பக்கம், சோவியத் ஆதரவுப் படைகள். இன்னொரு பக்கம், அமெரிக்க ஆதரவுப் படைகள். தள்ளி நின்று பார்த்தால் ஆப்கனிஸ்தானுக்குள் ஆப்கன் மக்கள் அடித்துக்கொண்டு சாகிறார்கள் என்பது போலத் தெரியும். உண்மையில் அவர்களை அடித்துக்கொள்ள விட்டு அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் ஆளுக்கொரு பக்கம் நின்று ஆட்டி வைத்துக்கொண்டிருந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!