Home » நீ வேறு, நான் வேறு – 47
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 47

47. கலவர பூமி

சமலாங் பள்ளத்தாக்குப் போர் என்பது, ஒரு பெரிய போரின் தொடக்கப் புள்ளி மட்டுமே. இம்முறை என்ன விலை கொடுத்தேனும் பலூசிஸ்தான் போராளிகளை மொத்தமாக அழித்துவிட வேண்டும் என்று புட்டோ முடிவு செய்திருந்தார். அந்த ஆறு நாள் போர் அவருக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் ஒரு புதிய வழியைத் திறந்து காட்டியிருந்தது. போராளிகளே ஆனாலும் குடும்பம் பாதிக்கப்படுமானால் மறைவிடங்களில் இருந்து வெளிப்பட்டே தீருவார்கள் என்பதுதான் அது. அதன் தொடர்ச்சியாக, பலூசிஸ்தான் முழுவதிலும் எங்கெல்லாம் போராளிகளின் குடும்பங்கள் தங்கியிருக்கின்றன என்று உளவாளிகள் தகவல் சொல்கிறார்களோ, அங்கெல்லாம் ராணுவம் தேடுதல் வேட்டை என்ற பெயரில் உள்ளே நுழைந்து அட்டகாசம் செய்யத் தொடங்கியது. இதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நூற்றுக்குத் தொண்ணூறு வீடுகளில் அவர்கள் வெறியாட்டம் நடத்தினார்கள். ஏனென்றால் எல்லா வீடும் ஒரு போராளியைத் தந்திருந்தது. சுருக்கமாகச் சொல்வதென்றால், வாக்காளர் பட்டியலைத்தான் அவர்கள் போராளிகள் பட்டியல் என்று கையில் வைத்துக்கொண்டு தேட ஆரம்பித்திருந்தார்கள்.

இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலூச்சி மக்களிடையே கசப்புணர்வை உண்டாக்கி, அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர்கள் மேலும் தீவிரப்படுத்தத் தொடங்கினார்கள். அதுவரை ஆண்கள் மட்டுமே போராளிகளாக இருந்தார்கள்; தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் புட்டோ ஆட்சிக்காலத்தில், முதல் முறையாக பலூச்சி இனப் பெண்களும் காவல் நிலையத் தாக்குதல்கள், ராணுவ வாகனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். மாநிலத்தின் பல பகுதிகளில் சுய உதவிக் குழுக்களைப் போலப் பெண்கள் மட்டுமே சேர்ந்து இயங்கிய போராளிக் குழுக்கள் தலையெடுக்கத் தொடங்கின. ஒரு சம்பவம் திட்டமிடுவார்கள். செய்து முடிப்பார்கள். உடனே கலைந்து போய் அவரவர் வீடுகளில் ரொட்டி சுடத் தொடங்கிவிடுவார்கள். கண்டே பிடிக்க முடியாத வண்ணம் அவர்களால் செயல்பட முடிந்தது. இது பெரிய பெரிய போராளி அமைப்புகளுக்கே வியப்பளித்தது. ஒரு கைத்துப்பாக்கி கூட இல்லாமல் ஏழு பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு காவல் நிலையத்தைத் தாக்கி, முற்றிலும் சேதப்படுத்திவிட்டுத் திரும்பிய சம்பவம் ஒன்று 1974 ஆம் ஆண்டு மே மாதம் பலூசிஸ்தான் முழுதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதனாலெல்லாம் வெறுப்படைந்த புட்டோ அரசாங்கம், பலூசிஸ்தானில் மேலும் ராணுவத்தைக் கொண்டு குவிக்க ஆரம்பித்தது. 1974-78 காலக்கட்டத்தில் மொத்தமாக எண்பதாயிரம் ராணுவ வீரர்கள் பலூசிஸ்தானுக்குள் இருந்தார்கள். ஒரே இலக்குதான். போராளி இயக்கங்களை ஒழிப்பது. மறுபுறம் பலூச்சிகள் தரப்பில் சுமார் ஐம்பத்தையாயிரம் போராளிகள் களத்தில் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு தாக்குதல் சம்பவமாவது நடந்தது. ராணுவத் தரப்பில் ஒவ்வொரு நாளும் ஒரு கிராமத்தையாவது முற்றிலும் கவிழ்த்துக் கொட்டி வேட்டையாடினார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!