52. வெடித்ததும் விளைந்ததும்
வன்மம், வெறுப்பு, விரோதம் போன்றவையெல்லாம் களையெடுக்க முடியாத அளவுக்கு வேரோடியிருக்கிறதென்றால் அதற்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட சம்பவம் அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் மட்டும் காரணமாக இருக்க முடியாது. நீடித்த, தொடார்ச்சியான, தலைமுறைகள் தாண்டிய காழ்ப்பில் அது விளைகிறது.
ஆனால் அடிப்படையில் மனித மனம் அமைதியை விரும்பும். யுத்தங்களையல்ல. ரத்தத்தை அல்ல. இழப்புகளையும் இல்லாமையையும் அல்ல. எண்ணிப் பாருங்கள். ஜியா உல் ஹக் என்னும் மனிதரின் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பலூசிஸ்தானுக்குச் சில நன்மைகள் நடந்தன. அவர்கள் ஆயுதங்களைத் துறந்தார்கள். அவருக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்களின் காலம் வரை அது தொடரத்தான் செய்தது. பாகிஸ்தான் அரசியல்வாதிகள் விரும்பியிருந்தால் இன்று வரையிலுமேகூட அது நீடித்திருக்கும் அல்லத்து நீட்டித்திருக்க முடியும். அவர்கள் விரும்பவில்லை. எனவே அது சாத்தியமில்லாது போனது.
1998 ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீப் ஆட்சிக்காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. வேறென்ன? பாகிஸ்தானின் முதல் அணு ஆயுதப் பரிசோதனை. அந்தப் பரிசோதனை, பாகிஸ்தானை ஓர் அணு ஆயுத நாடாக அறிவித்தது. பலூசிஸ்தானைப் பாகிஸ்தானின் முதல் தர உள்நாட்டு எதிரியாக மீண்டும் முன்னிறுத்தியது.
மே 28, 1998. பலூசிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள உள்ள சாகை (Chagai District) மாவட்டத்தில் ராஸ் கோ (Ras Koh) மொட்டை மலைகள் சூழ் பிராந்தியத்தில் பாகிஸ்தான் அணு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்திருந்தது. வறண்ட, பாலைப் பகுதிதான். பெரிய அளவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியும்கூட. கிட்டத்தட்ட ராஜஸ்தானில் நாம் குண்டு வெடித்துப் பார்த்த போக்ரன் போன்ற நிலப்பரப்பே என்பதில் சந்தேகமில்லை. நவாஸ் ஷெரீஃப் யோசிக்க மறந்தது என்னவென்றால், பொதுவாகவே பெரும்பாலான பலூச்சி பழங்குடி மக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிரந்தரமாக வசிக்காதவர்கள். அதுவும் மலைப் பிராந்திய மக்கள் இடம் பெயர்ந்துகொண்டே இருப்பார்கள். பருவ காலத்துக்கு ஏற்பத் தங்கள் இருப்பிடங்களை மாற்றுவது அவர்களது வழக்கம். எங்கே தங்களுக்கும் தங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வாதார சாத்தியங்கள் உள்ளனவோ அங்கே போவார்கள். குறிப்பிட்ட காலம் இருந்துவிட்டு இன்னோர் இடத்துக்கு நகர்வார்கள்.










Add Comment