51. வில்லாதி வில்லன்
நவாஸ் ஷெரீப் எப்படிப் பதவி இழந்தார், பர்வேஸ் முஷாரஃப் எப்படி அவரைத் தூக்கிக் கடாசினார், அந்த ராணுவப் புரட்சியின் திடுக்கிடும் காட்சிகளைப் பாகிஸ்தான் எப்படி எதிர்கொண்டது என்பதையெல்லாம் ஆர்வமுள்ளவர்கள் முஷாரஃப்பின் தன் வரலாறான In the line of fire இல் படித்துக்கொள்ளலாம். இந்த வரலாற்றுக்கு அது அநாவசியம். ஆனால் ஜியா உல் ஹக் ஆட்சிக்கு வந்தது முதல் முஷாரஃப் ஆட்சிக்கு வந்ததற்கு இடையில் சுமார் இருபதாண்டுக் காலம் இருந்தது. அந்த இருபதாண்டுக் காலமும் பலூசிஸ்தானில் பெரிய அசம்பாவிதங்கள் எதுவுமே நடக்கவில்லை. போராளி இயக்கங்கள் ஆயுதம் ஏந்தவில்லை. பாகிஸ்தான் ராணுவம் பரேடு நடத்தவில்லை. குண்டுகள் வெடிக்கவில்லை. கொலைகள் இல்லை. கைதுகள் இல்லை. ரெய்டுகள் இல்லை. ஒரு சர்வாதிகாரியின் முழு பத்தாண்டுக் கால ஆட்சி. இரண்டு ஜனநாயகவாதிகளின் அரைகுறைப் பத்தாண்டுக் கால ஆட்சி. மிக நீண்ட காலம்தான் அல்லவா?
அத்தனை நீண்ட காலம் அமைதியாக இருந்த பலூசிஸ்தான், முஷாரஃப் பதவிக்கு வந்த வேகத்தில் மீண்டும் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கிவிட்டதென்றால் அம்மனிதர் அம்மாநிலத்தில் என்ன செய்தார் என்று பார்ப்பது அவசியம். பலூசிஸ்தானின் வரலாற்றைக் கவனமாகப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும். 1948 ஆம் ஆண்டில் இருந்தே அவர்கள் போராடத் தொடங்கியவர்கள்தாம். அப்போதிலிருந்தே பாகிஸ்தான் ராணுவம் பலூசிஸ்தானில் சுழன்று சுழன்று வேட்டையாடியது உண்மைதான். நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் உயிர்கள் பறிபோனதும் உண்மையே. ஆனால் பர்வேஸ் முஷாரஃப்பின் காலத்தில் நிகழ்ந்த வெறியாட்டத்துக்கு நிகராக முன்னெப்போதுமே நிகழ்ந்ததில்லை.
இத்தனைக்கும் தனிப்பட்ட முறையில் அவருக்கு பலூச்சி இன வெறுப்பு இருந்திருப்பதற்கான நியாயங்கள் ஏதும் அவரது வாழ்வில் இல்லை. எல்லா பாகிஸ்தான் தலைவர்களையும் போல அவரும் பலூசிஸ்தானின் வளங்களைச் சுரண்டினார். எல்லாரையும் போல அவரும் பலூச்சிகளின் வாழ்வாதாரம் சார்ந்து சிந்திக்க மறந்தார். பலூசிஸ்தானுக்கு ஒரு மத்திய அரசு செய்ய வேண்டிய எதையும் செய்யாதிருந்ததிலும் எல்லோரையும் போலவேதான் இருந்தார். அம்மாநிலம் பசியிலும் பட்டினியிலும் பஞ்சத்திலும் தவித்த போது, சும்மா பார்த்துக்கொண்டுதான் இருந்தார். எதுவும் புதிதல்ல. ஆனால் அவரது ஆட்சியில்தான் பல்லாயிரக் கணக்கான பலூச்சிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். விசாரணையே இல்லாமல் கணக்கற்ற மக்கள் கைது செய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் ரத்த ஆறு ஓடிய காலமும் அவரது ஆட்சிக்காலம்தான். இவையெல்லாம்தான் இருபதாண்டுக் காலம் அமைதியாக இருந்த பலூச்சி விடுதலை இயக்கங்களைச் சிலிர்த்துக்கொண்டு எழவைத்தன. இருபத்தோறாம் நூற்றாண்டின் இந்த முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் அங்கு நிகழ்ந்த அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் மூல காரணமாக ஒருவரைச் சுட்ட வேண்டுமென்றால் பர்வேஸ் முஷாரஃப்பை நோக்கித்தான் நாம் விரல் நீட்டியாக வேண்டும். சிறிது கூர்ந்து பார்க்கலாம்.










Add Comment