உங்களால் ஒரு நாளில் எத்தனை நிமிடங்களுக்குச் சும்மா இருக்க முடியும்? அதென்ன நிமிடங்கள்? நானெல்லாம் எத்தனை மணி நேரம் சும்மா இருக்கிறேன் தெரியுமா என்று சொல்பவரா நீங்கள்? நிற்க. ‘சும்மா’ என்றால் உருப்படியான வேலையேதும் செய்யாமல், பயனற்று பொழுது போக்குவது என்ற பொருளில் சொல்லப்படவில்லை.
சும்மா இருக்கும் நேரத்தில் வேறெந்த செயலையும் செய்யாமல் இருக்க முடியுமா உங்களால்? முக்கியமாக, திறன்பேசியை நோண்டாமல் இருக்க முடியுமா?
நம்மில் பெரும்பாலானோர் சும்மா இருத்தலை நேரத்தை வீணடித்தல், சோம்பியிருத்தல் என்றே பொருள் கொள்கிறோம். எதுவும் செய்யாமல் இருப்பதை விட ஏதோவொன்று செய்து கொண்டேயிருப்பதே நல்லது என்று நம்புகிறோம். செய்தும் பழகிவிட்டோம். சும்மா இருப்பதைக் குடும்பத்தாரும் பொதுச் சமூகமும் ஊக்குவிப்பது இல்லை.
சும்மா என்ற சொல்லுக்கு ‘இயல்பாய், அமைதியாய்’ என்ற விளக்கங்களையும் கொடுக்கின்றது அகரமுதலி. எதுவும் செய்யாமல், தனியே ஓரிடத்தில் சிந்தனையைக் குவித்துச் சும்மாயிருப்பது வெகு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. சிந்தனையை ஒருமுகப்படுத்தப் பயிற்சி வேண்டும். ஆதலால் அதனை விட்டுவிடலாம்.















Add Comment