வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் தொண்டு நிறுவனத்தின் ஏழு உறுப்பினர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டதற்கு இரண்டு அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்துள்ளது இஸ்ரேல் அரசு. இன்னும் சிலரைக் கண்டித்துள்ளது. பைடன்- நெதன்யாகு. இருவரில் யார் அதிகபட்ச அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதில் போட்டி நிலவுகிறது. அந்த அளவுக்கு நட்பு நாடுகள், சக அரசியல் நண்பர்கள், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் அனைத்துத் தரப்பிலும் கோபத்தை எதிர்கொள்கின்றனர் இருவரும்.
தொண்டு நிறுவன ஊழியர்கள் ஏதோ ஒரு பையுடன் வண்டியில் ஏறுவதைப் பார்த்துக் குண்டு வீசிக் கொன்றுள்ளது இஸ்ரேல் படை. சும்மா சைக்கிள் தள்ளிக் கொண்டு செல்பவர்கள், வெள்ளைக் கொடியுடன் கையைத் தூக்கிக் கொண்டு வருபவர்கள், குழந்தையைக் கை பிடித்து அழைத்துச் செல்லும் பெண், தனியாக கையில் ஏதும் இன்றி நடந்து செல்பவர்…. இப்படி எந்த அச்சுறுத்தலும் இல்லாத சாமானிய பாலஸ்தீனியர்கள் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருக்கின்றன. இந்த முறை இறந்து போன ஏழு பேரில் சிலரிடம் வெளிநாட்டுப் பாஸ்போர்ட்கள் இருந்தது மட்டுமே வித்தியாசம். உதவிக்கு வந்தவர்கள் போர் நிறுத்தச் சமயத்தில் உயிர் இழந்திருக்கிறார்கள்.
கனடா, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா உள்ளிட்ட நாட்டுப் பிரஜைகள் இத்தாக்குதலில் உயிர் இழந்துள்ளனர். ஏப்ரல் 1-ல் நடந்த இச்சம்பவத்துக்குப் பிறகு, உணவளிக்கும் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தப்போவதாக வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் தெரிவித்தது. இஸ்ரேலுக்கு தேவையானது அதுதான்.
Add Comment