1. காணாத் தணல்
இந்தப் பெருங்கதையை உங்களுக்குச் சொல்லத் தொடங்கியிருக்கும் நான் மனிதனல்ல. மிருகமோ பறவையோ தாவரமோ, மண்ணோ மழையோ மற்றதோ அல்ல. நிதானம் கொள்ளுங்கள். நானொரு சொல். வெறும் ஒரு சொல். புழக்கத்தில் இருந்த, இருக்கும் எந்த மொழியிலும் நான் இல்லை. இனி தோன்றக்கூடிய புதிய மொழிகளென ஏதும் உண்டானால், அதிலும் இருக்க மாட்டேன். எனவே நீங்கள் என்னை அறிய வாய்ப்பில்லை. பிறகெப்படி நானொரு சொல்லாக இருக்க முடிகிறதென்றால், அது ஆதித் தனிமத்தின் சித்தம். உலகறிந்த ஓம் என்ற சொல் அதன் சிந்தையில் கருக்கொள்வதற்கு முன்பு நான் அங்கு இருந்தேன். பிரம்மத்தின் கருப்பையில் இரண்டாவதாகத் தோன்றிய ஓம் முதலில் பிறந்தது. அதிலிருந்து ஒளி பிறந்தது. உலகம் தோன்றி, உயிரினங்கள் தோன்றின. மனிதன் பிறந்தான். மொழிகள் பிறந்தன. பிறகு கோடி கோடிச் சொற்கள் பிறந்தன. கவிதை பிறந்தது. காவியங்கள் பிறந்தன. கதைகள் தோன்றின. மனித குலத்தின் எண்ணம் முழுவதும் சொற்களால் ஆளப்படுவதானது. கணக்கற்ற அச்சொற்களில் எது ஒன்றும் அதன் ஆதி மூதாதையான என்னை அறியாது.
ஏனெனில் நானொரு விசித்திரம். நானொரு நூதனம். பிரம்மத்தின் பிரத்தியேகம். எண்ணிக்கையில் அடங்காத சொற்களை ஏராளமான மொழிகளில் பொதித்துக் கொடுத்துவிட்டு, அது தனக்கென மட்டும் வைத்துக்கொண்டிருக்கும் ஒற்றைக் கருவி நான் மட்டுமே. யுக முடிவின்போது மட்டும் அது என்னைச் சிந்திக்கும். ஒரே ஒருமுறை உச்சரிக்கும். தன்னிடமிருந்து உதித்த இதர அனைத்தையும் ஒதுக்கிவிட்டு என்னை எடுத்து ஆளும். காலக்கணக்கற்று கர்ப்பத்தில் வசிக்கும் நான் அப்போது காணாத் தணலாக வெளிப்பட்டு அனைத்தையும் அழிப்பேன். தணிந்தபின் மீண்டும் ஆதித் தனிமத்தின் சிந்தைக்குள் கருக்கொண்டு உறங்கிவிடுவேன். மீண்டும் பிறப்பதென்பது அடுத்த யுகத்தின் முடிவின்போதுதான்.
புரியவில்லை அல்லவா? நான் பிரம்மத்தின் பிரத்தியேகம். அத்தனை எளிதில் அகப்பட்டுவிட வாய்ப்பில்லை. இன்னும் சில தகவல்களைத் தருகிறேன். பிடிபடுகிறேனா பாருங்கள்.










Just started the first chapter, seems deeply philosophical and interesting. Looking forward to reading the entire series. Thanks