‘பதினாறு முட்டைகளின் வெள்ளைக் கரு. அரை கிலோ சிக்கன். சத்தான பழங்கள், காய்கறிகள். மிகக் குறைவாக அரிசி உணவு. இப்படி ஒரு நாள் உணவுக்கு மட்டும் ஐந்நூறு ரூபாய் வரை ஆகும். கெட்ட பழக்கங்கள் எதுவும் இருக்கக் கூடாது. ஒரு நாளைக்குப் பதினைந்து மணிநேரம் வரை கூட நிற்க வேண்டி வரும். ஏழ்மை, குடும்ப சூழ்நிலையென ஆரம்பித்தது, இன்று அதுவே வாழ்க்கையாய் மாறிவிட்டது. நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் ஆசாபாசங்கள் இருக்கின்றன. வெல்ல வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. பவுன்சர் வேலை அவ்வளவு சுலபமல்ல. எங்களைச் சில சமயம் வில்லன்களாகக் காட்டலாம், ஆனால் அது உண்மையல்ல.’
சென்னையைச் சேர்ந்த இருபத்து ஏழு இளைஞர் கீர்த்திவாசனின் வார்த்தைகள் இவை. தந்தை ஆட்டோ ஓட்டுநர். பெரிய கல்லூரிகளில் சேர்வதற்கு வசதி இல்லை. படிக்கும் கல்லூரியில் ஃபீஸ் கட்டப் பணம் தேவை. அதற்காகப் பகுதிநேரப் பணியாக ‘பவுன்சர்’ எனப்படும் வேலையைச் செய்யத் தொடங்கினார். இப்போது அது அவருடைய வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது.
சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ஒரு ரசிகரை பவுன்சர் ஒருவர் குண்டுக்கட்டாகத் தூக்கி கீழே போட்டுவிட்டார். அந்த ரசிகரும் சும்மா இல்லை. பல தடுப்புகளை மீறி, விஜய் நடந்து வந்த ராம்ப் பாதைக்குத் தாவினார். இவர் போலவே மேலும் பல ரசிகர்களும் தொண்டர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இந்தச் சாகசங்களால் விஜய்க்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் ஆபத்துதான். அதனால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள் இவர்களை விலக்கப் படாதபாடு பட்டனர்.















Add Comment