பர்மா பஜாருக்குப் போகிறோம் என்றதும் ‘செத்துப்போன சந்தை அது. எதற்கு அங்கே செல்ல வேண்டும்? அங்கே ஒன்றுமில்லை.’ என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். கடற்கரை ரயில் நிலையத்தை விட்டு இறங்கி வெளியே வந்தால் இருபுறமும் பர்மா பஜார்தான். அப்படியொன்றும் அவசர சிகிச்சையில் இல்லை. உயிரோடு தான் இருக்கிறது. முன்பொரு காலத்தில் பரபரப்பாக இயங்கி இருக்கிறது. மக்களின் தேவைகளை மலிவு விலையில் பூர்த்தி செய்திருக்கிறது. அதனால் இப்போதைய நிலையைப் பொதுமக்களாலும் வியாபாரிகளாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு தான். ஆன்லைன் வர்த்தகமும், கொரானாவும் பழையதை யாருக்கும் மீட்டுக் கொடுக்கவில்லை- பர்மா பஜாருக்குக் கொஞ்சம் அதிகமாகவே.
பீரோ அளவில் சிறிய சிறிய கடைகளாக ஒன்றுபோலக் கட்டி விட்டிருக்கின்றனர். இங்கு இல்லாத பொருள்களே இல்லை. எலக்ட்ரானிக் பொருள்களின் சந்தைதான், அதில் மாற்றமில்லை. ஆனால் அந்த ஒரே வகைக்குள் அடக்கிவிட முடியாது. பேக், ஷூ, கரடி பொம்மைகள், விளையாட்டுப் பொம்மைகள், பெட்டி, ஒருசில துணிக்கடைகள் சி.டி. கடைகள் என்று இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு வகைவகையான கடைகள் நீண்டு சென்றன.
Add Comment