தமிழக அரசும், மக்கள் சிந்தனைப் பேரவையும் இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா, சிக்கய்ய கல்லூரியில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கி பன்னிரண்டு நாள்கள் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக ஈரோடு புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்று அரங்கம் அமைத்த புத்தக விற்பனையாளர்கள் புலம்பினர். இவ்வாண்டு எப்படியுள்ளது என்பதைக் காண வாரநாள், மாலை நேரம், வார இறுதிநாள் என மூன்று முறை விசிட் அடித்தோம்.
பிற மாவட்டப் புத்தகக் காட்சிகளுக்கும், ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. ஈரோடு மாவட்டப் புத்தகத் திருவிழாவில் சினிமா, சின்னத்திரைப் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கமாட்டார்கள். கேளிக்கை நிகழ்ச்சிகள் இருக்காது. பிளாஸ்டிக் டப்பாக்கள் விற்பனையைப் பார்க்க முடியாது. மத விளம்பர அரங்குகள் இருக்காது. புத்தக விற்பனையாளர்களுக்கு மட்டுமே ஸ்டால் கொடுப்பார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் புத்தகக் காட்சி குறித்த சுற்றறிக்கை அனுப்பிவிடுவார்கள். பள்ளிக்கூடங்களும் மாணவர்களைப் பள்ளிப் பேருந்தில் அழைத்து வருவார்கள்.
வாரநாளில் புத்தகத் திருவிழா நடைபெறும் சிக்கய கல்லூரிக்குள் நுழையும் போதே தனியார்ப் பள்ளிப் பேருந்து உள்ளே செல்ல நின்றிருந்தது. அதன் பின்னால் ஐந்து நிமிடங்கள் காத்திருந்தோம். நகரவே இல்லையே என்று எட்டிப் பார்த்தோம். முன்னால் மூன்று பள்ளிப் பேருந்துகள் ஊர்ந்து கொண்டிருந்தன. புத்தகக் காட்சிக்குள் சென்றோம்.














Add Comment