உலகின் உச்சியில் தான் உண்டு தன் பனி உண்டு என இருக்கும் ஒரு நாடு கிரீன்லாந்து. அதைத் தனி நாடு என்று கூட சொல்லிவிட முடியாது. தன்னாட்சி அதிகாரம் இருப்பினும் டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படுவது. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே இருக்கும் உலகின் மிகப் பெரிய தீவு. ஆயினும் மிகக்குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்டது. எண்பது விழுக்காடு நிலப்பரப்பு நிரந்தரமாக உறைபனியால் போர்த்தப்பட்டு இருப்பதே இதற்குக் காரணம். இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் சற்றே அதிகமான நிலப்பரப்பில் ஐம்பத்திஎட்டாயிரத்திற்கும் குறைவான மக்களே வாழ்கின்றனர். திடீரென உலகின் கவனம் கிரீன்லாந்தின் மீது கூடுவதற்கு என்ன காரணம்? டானல்டு டிரம்பின் பார்வை அதன் மீது பட்டுவிட்டதே காரணம். எப்படியேனும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றிவிட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்.
அம்மண்ணின் பெரும்பான்மை மக்களான இனுவிட் (Inuit) பழங்குடிகளின் மொழியில் கலாஹ்லித் நுனாத் (Kalaallit Nunaat) என்று அழைக்கப்படும் நிலப்பரப்பிற்கு கிரீன்லாந்து என எப்படி பெயர் வந்தது? பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவப்பு எரிக் (Erik the Red) எனும் ஆய்வுப்பயணி கொடுத்த பெயரே அது. அவர்தான் முதல் ஐரோப்பியக் குடியேற்றத்தை அங்கு நிகழ்த்தியவராகக் கருதப்படுகின்றார்.
கடல் பயணத்தில், தான் கண்டடைந்த புதிய நிலத்திற்கு கிரீன்லாந்து என ஒரு நேர்மறையான, நல்ல பெயர் கொடுப்பதால் அந்நிலத்திற்கு வளமான பசுமை அடையாளம் கிடைக்குமெனவும், அதனால் மக்கள் பலரும் அங்குக் குடியேறத் தூண்டப்படுவர் எனவும் நம்பினார். தான் எண்ணியது போலவே சில நூறு மக்களை ஐஸ்லாந்தில் இருந்து கிரீன்லாந்தின் தென் பகுதியில் குடியேற்ற அழைத்தும் வந்தார். ஆனால் அவர்கள் சொல்லிக்கொள்ளும்படி பல்கிப்பெருகவில்லை. ஆக, பெரும்பாலும் வெண்மையாக இருக்கும் ஒரு நிலப்பரப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் கிரீன்லாந்து என்ற புனைபெயர் சூட்டிய சிவப்பு எரிக்கின் எண்ணம் ஈடேறவில்லை. ஆயினும் அப்பெயரே நிலைத்துவிட்டது. ஐரோப்பியர் வருகைக்கும் பல நூற்றாண்டுகள் முன்பே பல்வகை இனுவிட் இனக்குழு மக்கள் கிரீன்லாந்தில் ஆங்காங்கே வாழ்ந்துவந்தனர்.
Add Comment