சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது புதுப்பேட்டை. வாகன உதிரிப் பாகங்கள் அனைத்தும் கிடைக்கும் சந்தை. இரண்டு சக்கரம், மூன்று சக்கரம், நான்கு சக்கரம், இன்னும் ஐந்து ஆறு என்று சக்கரங்கள் பெருகிக்கொண்டு போனாலும் அத்தனை சக்கர வாகனங்களுக்கும் இங்கு பாகங்கள் கிடைத்துவிடும். பழைய வாகனங்களும் விற்பனைக்கு உள்ளன. வியாபாரிகள் ஒருநாள் சுற்றிப்பார்த்து வாங்கிச் செல்லும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தை.
எங்கு பார்த்தாலும் பழைய வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களின் ஆதிக்கம்தான். பழமையின் வாசம் வீசும் பழஞ்சரக்குக் கடைகள். ஆனாலும் உள்ளே புதிய உதிரிபாகங்களும் கிடைக்கின்றன. சில கடைகள் நனிநாகரிகமாக இருக்கின்றன. ஒரு கடையில் ராயல் என்ஃபீல்டிற்கான உதிரி பாகங்கள் மட்டுமே வைத்திருந்தார். பாகங்கள் பழையதாக இருந்தாலும், அக்சசரீஸ் அனைத்தும் புதியனவே.
சைலன்சர் விலை ஆயிரம் ரூபாயில் தொடங்கி ஏழாயிரம் வரை இருக்கிறது. ஹெட்லைட் முதல் எல்லா பொருளும் அப்படித்தான். பல தரத்தில் இருக்கின்றன. இதில் ஒரு வசதி பலதரம் வைத்திருப்பதால் நம்மிடம் எதையும் வற்புறுத்தித் திணிப்பதில்லை. நமக்கு எந்த விலையில் என்ன பொருள் வேண்டுமோ அதைத் தேர்வுசெய்து கொள்ளலாம். ஒரு புதுப் பொருளின் விலை பத்தாயிரம் எனில் இங்கு விற்கும் பழையது ஐந்தாயிரமாக இருக்காது. அதைவிட குறைவாகக் கிடைக்கும். இதுதான் இச்சந்தையின் அபார வளர்ச்சிக்குக் காரணம். A-Z அனைத்து பாகங்களும் கிடைப்பதால் அசைக்க முடியா சந்தையாக உருவெடுத்திருக்கிறது.
last line is the first line of balakumarans’novel..think irumbukkuthiraikal…good one sridevi