சேலம் மாநகரின் மையமான குகை பகுதியில், முனியப்பன் கோவில் தெருவை ஒட்டிய ஆற்றுக்குப் போகும் வீதியில் அமைந்துள்ளது கெரடி தாலீம். இது சுமார் 144 ஆண்டுகள் பழமை வாய்ந்த உடற்பயிற்சிக் கூடம். கெரடி தாலீம் என்கிற பெயர் வித்தியாசமாக உள்ளதே என அதனை ஆராய்ந்தால் இன்னும் சில சுவாரசியமான தகவல்கள் கிடைக்கின்றன.
கரடி என்கிற தமிழ் வார்த்தைக்கு சிலம்பம் என்றொரு பொருள் உண்டு. கரடி என்கிற வார்த்தைதான் கன்னட மொழியில் சற்று மருவி ‘கெரடி’ என வழங்கப்படுகிறது. தாலீம் (அ) தலீம் என்பது அரபிமொழி வார்த்தை. இதற்குக் கல்வி கற்றல் அல்லது கற்பித்தல் என்பது பொருள். கெரடி தாலீம் என்றால் சிலம்பம் கற்றுத்தரும் இடம் என்று பொருள்.
சரி, தமிழ்நாட்டில், அதுவும் 144 ஆண்டுகளுக்கு முன்பு எதற்காகக் கன்னட மொழியும், அரபி மொழியும் இணைந்த ஒரு வார்த்தையைக்கொண்டு ஓர் உடற்பயிற்சிக்கூடம் உருவாக்கப்பட்டது?
ஏனென்றால், இந்தப் பகுதியில் ஆதியில் கன்னட மொழி பேசும் தேவாங்க செட்டியார் குடும்பங்களும், உருது மொழி பேசும் இஸ்லாமியர் குடும்பங்களும் பெருமளவில் வசித்துவந்துள்ளன. அவர்களுக்குத் தெரிந்த மொழியிலிருந்து இருவார்த்தைகளை இணைக்கப் போய், அது தலைமுறை தலைமுறையாக நீடித்து ஒரு லேண்ட்மார்க் ஆகவே மாறி நிலைத்து விட்டது.















Add Comment