கல்லூரி மாணவராகச் சிறைக்குச் சென்ற லாரன்ஸ் பிஷ்னாய் சமூக விரோதக் கும்பலுக்குத் தலைவனாக உருவானது சிறையில் இருந்தபோது தான். குற்றம் செய்ததற்கான தண்டனையாகத் தான் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் அந்தச் சிறைத் தண்டனை ஒருவரின் குற்றச் செயலை அதிகரிக்கும் விதமாக இருந்தால் என்னவாகும்? பல ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் லாரன்ஸ் பிஷ்னாயின் நடவடிக்கைகள் அதற்குச் சான்றாக இருக்கின்றன. செய்த குற்றங்களுக்குத் தாங்கள் தான் பொறுப்பெனத் தைரியமாகப் பொதுவெளியில் சொல்லும் தீவிரவாத கும்பலுக்கும் லாரன்ஸ் பிஷ்னாயின் சட்டவிரோதக் கும்பலுக்கும் பெரிதாக வேறுபாடுகள் எதுவுமில்லை.
முப்பத்தொரு வயதான லாரன்ஸ் பிஷ்னாய் பேசுபொருளானதற்குப் பல்வேறு சம்பவங்கள் காரணமாக இருக்கின்றன. சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் அதன் உச்சம். ஒன்று கனடா நாட்டு அரசு காலிஸ்தான் தலைவர்கள் மீதான தாக்குதலில் அவருடைய பெயரைத் தொடர்புப்படுத்திப் பேசியது. இந்தச் செயலில் இந்திய அரசுக்கும் மறைமுகத் தொடர்புள்ளது என்று சொன்னதும் வெளிப்படையான குற்றச்சாட்டு. இரண்டாவது மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரான தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த பாபா சித்திக்கின் படுகொலை. சட்டமன்ற உறுப்பினரான பாபா சித்திக்கின் மகனுடைய அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. மூன்று பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி பாபா சித்திக் மரணமடைந்தார்.
பிரபல இந்தி நடிகர் சல்மான்கானோடு அவருக்கு இருந்த நெருங்கிய தொடர்பு தான் இந்தப் படுகொலைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மும்பை மற்றும் பஞ்சாப் காவல்துறையின் கூட்டு முயற்சியால் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருந்த முக்கியமான குற்றவாளியான சுஜீத் சுஷில் சிங் என்பவரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. கடந்த ஏப்ரல் மாதம் சல்மான்கானின் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய ஏழு பேர் கொண்ட கும்பலும் இந்தப் படையில் சேர்த்தி.
Add Comment