விமலாதித்த மாமல்லன்
புகார் கொடுக்கவேண்டும் என்று வந்து உட்கார்ந்து, தம்மை கன்சல்டண்ட் என்றும் ஆடிட்டர் என்றும் மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டு கசகசவென மூச்சுவிடாமல் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தவரை பேசவிட்டுப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த சிபிஐ இன்ஸ்பெக்டர், அவர் மூச்சுவிட எடுத்துக்கொண்ட முதல் இடைவெளியில்,
‘நீங்க சொன்னதை நான் புரிஞ்சிக்கிட்டபடிச் சொல்றேன். நான் சரியா புரிஞ்சிக்கிட்டு இருக்கேனாங்கறதை நீங்க சரி,இல்லேனு மட்டும் சொன்னா போதும். ஓகேவா’ என்றார்.
சரி எனத் தலையை ஆட்டினார் வந்தவர். சிபிஐ என்கிற பெயருடன் ஒட்டிக்கொண்டிருக்கிற இனம்புரியாத பயம்தான் அவரைப் படபடவெனப் பேசவைத்துக்கொண்டிருந்தது என்பதைப் புரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் அவரிடம்,
‘நீங்க ஒரு தப்பும் பண்ணலே. தப்பு பண்ணாதவங்களும் சட்டப்படி நடக்கறவங்களும் பயப்படத் தேவையேயில்லே. போலீஸைப் பாத்துத் திருடன் இல்லையா பயப்படணும். தைரியமா இருங்க’ என்று முதலில் அவரை அமைதிப்படுத்தினார்.
Add Comment