மாவோரி.
மிகப் புராதனமான இந்தப் பழங்குடி இனம் நியூசிலாந்தில் உள்ளதை நாம் அறிவோம். அதுவும் சென்ற வருடம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி இனத்தைச் சேர்ந்த இளம் பெண் எம்பி ஒருவர் ருத்ர தாண்டவம் ஆடிய (ஹக்கா நடனம்) விடியோ க்ளிப்பிங்கின் தொடர்ச்சியாக மட்டும். மீண்டும் நாம் மாவோரிகளைச் சிந்திப்பதற்காக இன்னோர் அழகிய பெண் எம்பியை அவர்கள் தேர்ந்தெடுக்கும் வரை காத்திருப்பது என்பது நியாயமில்லை. நியூசிலாந்தில் அன்றும் இன்றும் அவர்கள் பேசுபொருளாகத்தான் உள்ளார்கள். எல்லா ஆதிகுடிகளுக்கும் எல்லா நாடுகளிலும் உள்ள பிரச்னைகளுடன்தான் உள்ளார்கள். சென்ற வருடம் நாம் கண்ட பெண் எம்பியின் ருத்ர தாண்டவ உறுதியேற்புச் சடங்கு கால காலமாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இன்று வரை.
சரி. இன்றைய பிரச்னைக்கு வருவோம். நியூசிலாந்தின் மாவோரிப் பெயர் வடிவம் ‘ஆவ்டெயரொவா’. அதை அவர்கள் பயன்படுத்துவது பற்றி எந்தப் புகாரும் ஏற்கப்படாது என்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமீபத்தில் அறிவித்தார். அப்படியென்றால் மாவோரிகள் பயன்படுத்தும் அந்தப் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாதென்று உள்ளூரில் கிளர்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பொருள்.
நியூசிலாந்து என்பது உலகறிந்த பெயர். அவர்கள் மட்டும் எதற்காகத் தனியொரு பெயர் கொண்டு நாட்டைக் குறிப்பிட வேண்டும்?
என்றால், அது அவர்களது தனியுரிமை. மண்ணின் மக்கள் அல்லவா? அவர்களுக்கில்லாத உரிமையா?
Add Comment