தமிழ்நாட்டை அறிவுசார் செயல்பாடுகளில் முன்னணியில் நிறுத்துவது அரசின் கனவாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் அமைப்பதில் தொடங்கி பள்ளிகளில் அறிவியல் ஆர்வம் உண்டாக்கும் வானவில் மன்றம் வரை பல திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. நல்லது. திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவை நீர்த்துப் போகாமல் இருப்பதும் முக்கியமல்லவா!
சமீபத்திய மூடநம்பிக்கைப் பேச்சாளர் விவகாரத்தைப் பாருங்கள். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணுவுக்கு என்ன வேலை? என்று தமிழ்ச் சமூகம் கேள்வி எழுப்பியவுடன் கைது நடவடிக்கை பாய்கிறது. அது மட்டுமா? விசாரணை தொடங்கும் முன்பே தலைமை ஆசிரியரை இடம் மாற்றம் செய்தாகிவிட்டது. வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படும் வரை பள்ளிகளில் எல்லா பேச்சாளர்களுக்கும் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவர் முன்னிலையில் பேச ஒருவரைப் பள்ளி அழைக்கிறது. அவர் இதற்கு முன்பு பேசிய பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளன. அதைப் பார்த்திருந்தாலே என்ன பேசுவார் என்பது தெரிந்திருக்கும். அவர் யார் என்பதை அறிந்து கொள்ளும் அக்கறை கூட இல்லை. இன்ஸ்டாவில் எத்தனை பேர் பின் தொடர்கிறார்கள் என்பதை வைத்து அழைத்தார்களோ என்னவோ.
உரையாற்ற வந்த மகாவிஷ்ணு மூடநம்பிக்கைக் கருத்தொன்றை ஆன்மிகம் என்ற பெயரில் மாணவர்களிடம் சொல்கிறார். ஆசிரியர் சங்கர் மட்டுமே அதை எதிர்த்துக் கேள்வி கேட்கிறார். அவரோடு இணைந்து கேள்வி கேட்டிருக்க வேண்டிய மற்ற ஆசிரியர்கள் சங்கரைச் சமாதானப் படுத்துகிறார்கள். பள்ளியில் அறிவியலுக்குப் புறம்பான கருத்தைப் பேசக் கூடாது என்று சொல்ல யாருமே துணியவில்லை.
Add Comment