கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் பழிக்கு-பழி கொலைகள் நாடுகளைக் கடந்து எல்லைகளைக் கடந்து தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அழிக்க பேஜர் தாக்குதல்களைச் செய்தது இஸ்ரேல் நாட்டின் உளவுத் துறை என்று நம்பப்படுகிறது. பேஜர் வெடிப்பு மரணங்களைத் தொடர்ந்து “வடக்கே நகர்கிறது போர்” என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு வடக்கே இருக்கும் லெபனான், மத்திய-கிழக்கில் கத்தார் அளவேயிருக்கும் சிறிய நாடு. பல ஆண்டுகளாக இங்கே அதிகாரமிக்க அரசு அமைப்பு கிடையாது. ஆயுதம் ஏந்திய அமைப்பான ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டில் பெரும்பகுதிகள் இருக்கின்றன. 1982ஆம் ஆண்டு இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்த போது இரான் நாட்டின் உதவியோடு உருவாக்கப்பட்ட அமைப்பு ஹிஸ்புல்லா. அவர்களுக்கு அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தற்சமயம் பதினைந்து உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சுமார் இலட்சம் பேர் ஆயுதம் தாங்கிய படையில் இருப்பதாக நம்பப்படுகிறது. இவர்களுக்கும் இஸ்ரேலுக்கும் எப்பொழுதும் சண்டை நடந்து கொண்டேயிருக்கும். நம்மூரில் தீபாவளிக்கு, உள்ளூர் தலைவர் இறப்பிற்குத் தான் சாதா பட்டாசு வெடிப்போம். இவர்கள் அடிக்கடி ஒருவருக்கு ஒருவர் ஏவுகணைகளை அப்பாவி மக்கள் வசிக்கும் இடங்களில் மாறி மாறி எறிவார்கள். பலர் இறப்பார்கள். துரதிருஷ்டவசமாக இதெல்லாம் அங்கே சர்வ சாதாரணம்.
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் கடைத்தெருவில் சிசிடிவியில் பதிவான காட்சி இது. வெளிர் நிற அரைக்கைச் சட்டை, தலையில் நீலத் தோப்பி அணிந்த நடுத்தர வயது நபர், ஆரஞ்சுப் பழங்களைத் தள்ளுவண்டிக் கடையிலிருந்து பொறுக்கிக் கொண்டிருக்கிறார். கடைப் பையன் அதை நெகிழி உறையில் போட்டு முடிச்சுப் போடப் போகத் திடீரென்று தொப்பி ஆசாமியின் இடுப்புப் பகுதியில் இருந்து கரும்புகை. சின்ன வெடிச் சத்தம் கேட்கிறது. தொப்பி ஆசாமி வயிற்றைப் பிடித்தபடி கீழே விழுகிறார். கடைப் பையன் தலை தெறிக்க ஓடுகிறான். எதிரிலிருக்கும் இளைஞர் தன் காதைப் பொத்துகிறார். என்ன நடந்தது என்று பார்த்தபடியே அருகில் இருந்த பெண்மணி மகளைத் தூக்கி இடிப்பில் வைத்துக் கொண்டு நடக்கிறார்.
Add Comment