பீட்டர் பிஷெல்
தமிழில்: சுகுமாரன்
அதிகம் பேசாத, சிரிக்கவோ, கோபித்துக் கொள்ளவோகூடச் சோர்வடையும் முகமுடைய ஒரு கிழவனின் கதையை உங்களுக்குச் சொல்லப்போகிறேன். ஒரு சின்ன நகரத்தில் நாற்சந்தியை அடுத்த தெருவின் கோடியில் அவன் வசித்துவந்தான். அவனை வர்ணிப்பது அநாவசியம். ஏனெனில் மற்றவர்களிடமிருந்து அவன் வேறுபட்டிருக்கவில்லை. சாம்பல் நிறத் தொப்பியும் அதே நிறத்தில் கால்சாராயும் பச்சைச் சட்டையும் போட்டிருப்பான். குளிர்காலத்தில் நீண்ட பச்சை நிறக் கோட்டையும் அணிந்து கொள்வான். அவனுடைய கழுத்து குறுகியும் சருமம் வறண்டு சுருங்கியுமிருந்ததால் கோட்டின் காலர் மிகப் பெரியதாகத் தோன்றும். அவனுடைய அறை அந்த வீட்டின் மேல்தளத்தில் இருந்தது. ஒருவேளை அவனும் கல்யாணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொண்டிருந்திருக்கலாம். இதற்குமுன் வேறு ஏதாவது நகரத்தில் வசித்திருக்கலாம். ஒருகாலத்தில் அவனும் நிச்சயமாகக் குழந்தையாக இருந்திருக்கவேண்டும். குழந்தைகள்கூட வளர்ந்தவர்களைப்போல சட்டை போட்டுக்கொண்டு திரிந்த காலம் அது. பாட்டியின் போட்டோ ஆல்பத்தில் அதைப் பார்க்கலாம். அவனுடைய அறையில் இரண்டு நாற்காலிகள், ஒரு மேஜை, ஒரு ஜமுக்காளம், ஒரு படுக்கை, ஒரு அலமாரி ஆகியவை இருந்தன. ஒரு சின்ன மேஜை மீது அலாரம் கடிகாரம். அதற்குப் பக்கத்தில் பழைய செய்தித்தாள்களும் போட்டோ ஆல்பமும் இருந்தன. சுவரில் கண்ணாடியும் ஒரு படமும் மாட்டியிருந்தன.
காலையிலும் மாலையிலும் கிழவன் உலாவப் போனான். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சில வார்த்தைகள் பேசினான். இரவில் மேஜை அருகில் உட்கார்ந்திருந்தான்.
இது ஒருபோதும் மாறவே இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளில்கூட அப்படித்தான். அவன் மேஜையருகில் உட்கார்ந்திருந்தான். அவன் மேஜையருகில் உட்காருகையில் கடிகாரம் ஒலிப்பதைக்கேட்டான். அதே டிக்டிக் சப்தம்.
ஒரு தடவை அதிக வெப்பமோ அதிகக் குளிரோ இல்லாமல் மிகப் பிரகாசமான சூரியனுடனும் பறவைகளின் குதூகலத்துடனும் சிநேகமான மனிதர்களுடனும் விளையாடும் குழந்தைகளுடனும் ஒரு பிரத்தியேகமான நாள் விடிந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவற்றையெல்லாம் கிழவன் விரும்பினான்.
Add Comment