விறகுக் கட்டைத் தலையில் சுமக்கும் பெண்களும், சுள்ளி பொறுக்கும் சிறுமிகளும் இல்லாத ஊர்கள் உருவாகப் போகின்றன. சுயசார்பு என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல, மின்சாரத்திலும் நனவாகப் போகிறது. சூரிய ஒளி மற்றும் காற்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், உலகின் முப்பது சதவீத மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறது. மழையைத்தான் வீணடிக்கிறோம்; வெயிலையாவது சேமித்து உபயோகமாக்குவோம்.
சூரிய ஒளியிலிருந்து பதினாறு சதவீதம் மற்றும் காற்றாலை மூலமாகப் பத்து சதவீத மின்சார உற்பத்தி நிலையை அடைந்துள்ளது உலகம். படிம எரிபொருள்களான நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு போன்றவற்றைப் பணி ஓய்வு கொடுத்து இளைப்பாறச் செய்யும் நாள் விரைவில் வரும். இன்னும் ஐந்தாண்டுகளில், மொத்த மின்சார உற்பத்தியில் ஐம்பது சதவீதத்தைப் புதுப்பிக்கவல்ல ஆற்றல்களிலிருந்து தயாரிக்கும் நிலைக்கு முன்னேறப் போகிறோம்.
நாம் உபயோகிக்கும் வேகத்திற்கு ஈடுகொடுத்து உருவாக முடியாத ஆற்றல்களைத்தான் புதுப்பிக்க முடியாத வளம் என்கிறோம். நிலத்தடிப் புதைந்திருக்கும் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு இத்தனை நாள் கிடைப்பதே, நம் பூர்வஜென்மப் புண்ணியத்தால்தான். இனியும் காப்பாற்ற முடியாத அளவுக்கு, இவற்றையெல்லாம் சுரண்டி நாம் பாவங்கள் சேர்த்து விட்டோம். அதனால்தான், அடுத்ததை நோக்கி நகர்கிறோம். அதிலும் சீக்கிரம் தீர்த்துவிட முடியாத, நம் உபயோகத்தைவிட வேகமாக புதுப்பித்துக் கொள்ளத்தக்க வளங்களை நோக்கி நகர்கிறோம். மின்சாரம், காற்றாலை, தண்ணீர், புவிவெப்ப ஆற்றல், உயிர்க்கூள ஆற்றல், அலைகள், கடல் நீரோட்டங்கள் என இதில் பலவகை உண்டு.
Add Comment