இரத்தசாட்சி
ஆண்டு 1954இல் ஓஹையோ மாகாணத்தில் ஒரு ஜூலை மாத அதிகாலைப்பொழுது. நகர மேயருக்கு அவரது நண்பர் சாம் ஷெப்பர்டிடமிருந்து தொலைபேசி அழைப்புவந்தது. “மேரிலின் இறந்துட்டான்னு நெனைக்குறேன், நீ சீக்கிரம் வாயேன்” என்றார் ஷெப்பர்ட். சம்பவ இடத்தை அடைந்தார் மேயர். சாம் அதிர்ச்சியோடும் பின்னங்கழுத்தில் கையை அழுத்திப்பிடித்தபடியும் அமர்ந்திருந்தார். மேயரைக் கண்டதும் சம்பவத்தை விவரித்தார் சாம்.
சாமின் குடும்பமும் அவரது நண்பரின் குடும்பமும் முந்தைய நாள் மாலைப்பொழுதைக் கடற்கரையில் கழித்தனர். பிறகு, சாமின் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்தனர். நள்ளிரவுச் சமயத்தில் சாமின் நண்பரது குடும்பம் விடைபெற்றுச்சென்றது. மதிப்புக்குரிய மருத்துவரான சாம், அன்றைய தினம் மருத்துவமனையில் கடுமையான வேலைகளைச் செய்துள்ளார். எனவே, வரவேற்பறையிலிருந்த மேசையிலேயே படுத்து உறங்கிவிடுகிறார்.
அதிகாலையில் மாடியிலுள்ள படுக்கையறையிலிருந்து அவரது மனைவி அலறும் குரல்கேட்டு விழிக்கிறார் சாம். ஓடிச்சென்று பார்க்கையில் இருகால்களுடைய வெள்ளை உருவமொன்று (அப்படித்தான் விவரிக்கிறார் சாம்) தனது மனைவியைத் தாக்கிக்கொண்டிருப்பதைக் காண்கிறார். தடுக்கச்சென்ற அவரைப் பின்னங்கழுத்தில் தாக்கியுள்ளது அந்த உருவம். நிலைகுலைந்து விழுந்த சாம், மெல்லத் தடுமாறி எழுகிறார். அப்போது அந்த உருவம் அங்கில்லை.
Add Comment