மனோஜ் நைட் ஷியாமளன்
2002ஆம் ஆண்டு. அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூஸ்வீக் வார இதழ் ‘அடுத்த ஸ்பீல்பெர்க்’ என்ற அடைமொழியோடு ஒரு அட்டைப்படத்தை வெளியிட்டது. அந்தப் புகைப்படத்தை அலங்கரித்தவர் மனோஜ் நைட் ஷியாமளன். புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில் பிறந்தவர். ஒருவர் உலகின் எந்த மொழியில் திரைப்படம் இயக்கிக்கொண்டிருந்தாலும் அவருக்கு இந்த அங்கீகாரம் பெருமைக்குரியது. ஏனெனில் திரைக்கலையைக் கொண்டாடும் அனைவரும் மதிக்கும் திறமை மிகுந்த ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.
மனோஜ் பிறந்த சில வாரங்களிலேயே அவருடைய குடும்பம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்துக்குப் புலம் பெயர்ந்தது. மனோஜின் தந்தை நெல்லியாட்டு சி. ஷியாமளன் மாஹேவைச் சேர்ந்தவர். நரம்பியல் மருத்துவர். தாயார் ஜெயலட்சுமி, சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்திய இளைஞரான மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட்டில் தன் வித்தியாசமான படைப்புகளின் மூலம் உலகளவில் கவனம் ஈர்த்தவர்.
தங்களைப் போலவே மகனும் மருத்துவராவார் என எதிர்பார்த்தனர் அவருடைய பெற்றோர். ஒரு நாள் ‘நியூயார்க் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன். அதுதான் சிறந்த கல்லூரி, உதவித்தொகையும் கிடைக்கும்’ எனத் தந்தை முன்பு போய் நின்றார். அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. கலைகளின் மீது ஆர்வம்கொண்ட அம்மா மனோஜின் முடிவை மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார். அது போதுமே! படித்துக் கொண்டிருந்தபோதே நண்பர்களுடன் சேர்ந்து நாற்பத்தைந்து குறும்படங்களை இயக்கியிருந்தார்.










Add Comment