14 – பேரழிவு கற்றுத்தந்த பாடம்
நிலையான ஆட்சி என்பதே சோவியத்தின் உடனடித் தேவையானது. நாட்டின் தேக்க நிலையைச் சரிசெய்யுமளவு, இறந்துபோன குறுகியகால அதிபர்களுக்கு நேரமிருக்கவில்லை. நல்ல வேளையாக இப்பதவிக்குப் பொருத்தமானவர், ஏற்கெனவே செயல்படத் தொடங்கியிருந்தார்.
மிகைல் செர்கேயவிச் கர்பச்சோவ் (1985-1991) ப்ரிவோல்நோயி என்ற கிராமத்தின் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கட்சி இளைஞரணியில் சேர்ந்து, கூட்டுப்பண்ணைகளில் தானியங்களைச் சேகரிக்கும் இயந்திர ஓட்டுநரானார். கல்வியில் ஆர்வம் கொண்டு, சட்டப்படிப்பை முடித்தார். இலக்கியத்திலும், நாவல்களிலும் ஆர்வமிக்கவர். அதிபர் நிகிதா குருஷவின் சீர்திருத்தங்களே இவரைக் கட்சிக்குள் இணைத்தவை. கட்சியில் வளர்ந்து, ஸ்தாவ்ரபோல் பிராந்தியத்தின் செயலாளரானார். பின் மாஸ்கோ தலைமைக்குழுவில் இடம்பெற்ற, இளம் உறுப்பினரானார்.
இறக்கும் தருவாயில், யூரி ஆண்ட்ரோபோவ் இவரைத்தான் அடுத்த அதிபராக முன்மொழிந்தார். ஆனால் குழுவின் இளையவரான கர்பச்சோவை, கட்சியின் தலைமைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, மூத்தவரான செர்னென்கோவையே அடுத்த அதிபராக்கியது. இவரின் குறுகிய கால மரணம், கர்பச்சோவிற்கு அதிபராகும் வாய்ப்பளித்தது. இம்முறை எதிர்ப்புகள் இருக்கவில்லை. அவர் வெளியுறவுத் துறையைத் திறமையாகக் கையாண்ட விதம் ஒரு காரணம். இன்னொன்று, அவரது வயது. முன்னர் பதவிக்குப் போதாமலிருந்த இளவயது, இப்போது முக்கியத் தேவையானது. நிலையான ஆட்சியமைக்க அதிபராக்கப்பட்டார்.
தனது தாத்தாக்கள் வழியாகக் கேட்டறிந்த குலாக்குகளின் சித்ரவதைக் கதைகள், கர்பச்சோவை பெரிதும் பாதித்திருந்தது. இதுவே மற்ற அதிபர்களிலிருந்து அவரை முற்றிலும் வேறுபடுத்தியது. “இதற்கு மேலும் இப்படியே வாழ்ந்து கொண்டிருக்க முடியாது” என்பதே பதவியேற்கும்முன், அவர் தன் மனைவியிடம் கூறியது. சோவியத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும் என்பதை உறுதியாக நம்பினார். அதற்கான தேவையும் பின்வரும் சம்பவத்தால் உறுதி செய்யப்பட்டது.
Add Comment