உயரத்திற்குப்போன எல்லாமே என்றேனும் ஒரு நாள் கீழே வருவதும், கீழே உள்ளது மேலே போவதும் இயல்பு. இதனை ஒரு பொதுவிதி என்றுகூடச் சொல்லலாம். வியாபாரம் உலகமயமாக்கப்பட்ட பின்பு உயரும் விலைவாசிக்கு இந்த விதி பொருந்துவது இல்லை. குறிப்பாக, தங்கத்தின் விலையானது இந்த விதியினை அடித்துத் தூள் தூளாக்கிவிட்டு எப்போதும் உச்சத்தில் பறந்து ஜொலித்துக்கொண்டே இருக்கிறது. விலைக் குறைய வேண்டாம். அதிகமாகாமல் இருந்தாலேப்போதும் என்பதே நிறைய பேரின் வேண்டுதல்.
எந்த அளவுக்கு பூமிக்கு அடியோடி தங்கம் எடுக்கப்படுகிறதோ, அதைவிட அதிக உயரத்திற்கு அதற்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. பயன்பாட்டினைப்பொறுத்தவரையில் தங்கம் எப்போதும் ஒரு சர்வரோக நிவாரணி. லாபம்தரும் முதலீடு என்பது ஒருபுறம். அவசரத்தேவைக்கு எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பணமாக்கிக்கொள்ளலாம் என்கிற சுதந்திரம் ஒருபுறம், அணிந்து கொள்ளும்போது நான்குபேருக்கு மத்தியில் அந்தஸ்து, கௌரவம் ஆகியவற்றை உயர்த்திக்கொடுக்கும் தன்மை ஒருபுறம். இப்படிப்பட்ட பன்முகம்தான் தங்கத்தின் சிறப்பு.
கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை முழுமையாக கிடைப்பதற்கு முன்பே, இவை தரும் பொருளாதார தன்னிறைவினையும், பாதுகாப்பினையும் பெண்களுக்குக் கொடுத்தது தங்கமே. அவசரத்தேவைக்கு கையிலும், கழுத்திலும், காதிலும் இருக்கும் நகைகளை கழட்டிக்கொடுத்து குடும்பத்தினை காப்பாற்றாத நடுத்தரக் குடும்பத்துப் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
Add Comment