கோவிட் என்றொரு தொற்று வந்து உலகையே அச்சுறுத்திச் சென்றதை நாமனைவரும் ஒரு கெட்ட கனவாக எண்ணிக் கடந்துவிட்டோம். சகஜமான வாழ்க்கைக்குத் திரும்பி ஆண்டுகள் சில ஆகிவிட்டன. “எல்லாம் இப்படியே போக வேண்டும் என்றால் எங்கள் பேச்சைக் கேளுங்கள்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் கூறியுள்ளார். திடீரென்று எழுந்த குரல் அல்ல இது. 2021-ஆம் ஆண்டிலிருந்தே அவர் போகுமிடங்கள் எல்லாம் எச்சரிக்கை செய்து வருகிறார்.
காரணம் இன்னொரு தொற்று எப்பொழுது வேண்டுமென்றாலும் வர வாய்ப்பு உள்ளது. அது கண்டிப்பாக கோவிட்டாக இருக்க வாய்ப்பில்லை. மூச்சுத் திணறல் போன்று மூச்சு சம்பந்தமான நோயாக இருக்கலாம். அல்லது விலங்கினங்களிருந்து வரும் தொற்றாகவோ அல்லது டெங்கு போன்ற காய்ச்சலாகவோ இருக்கலாம் என்று யூகிக்கிறார்கள். பல ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
2022-ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில், டெட்ரோஸ், உலகச் சுகாதார உறுப்பினர்கள் அனைவரும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அனைவரும் என்றால் நூற்றுத் தொண்ணூற்று நான்கு நாடுகள் அடங்கும். ஒப்பந்தம் இன்னொரு தொற்று வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான விதிகளைக் கொண்டுள்ளது. மற்ற நாடுகளோடு எப்படிச் சேர்ந்து வேலை செய்ய வேண்டும், மருந்து உற்பத்திகளில் எப்படிக் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் வளர்ந்த நாடுகள் எதுவும் இதுவரை கையெழுத்திடவில்லை.
Add Comment