“நாங்கள் மீண்டும் உக்ரைனுடன் இணைவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. எங்களைக் காப்பாற்ற இங்கு யாரும் வருவதில்லை” என்கிறார் கெர்சோன் நகரில் வசிக்கும் கலீனா. இரண்டு வருடங்களாக ரஷ்யாவின் பிடியிலிருக்கும் பகுதி இது. உக்ரைனால் மீட்கப்படுவோம் என்ற கனவுகளுக்கு இனி இடமில்லை என்ற நடைமுறை உண்மையைப் புரிந்து கொண்டவர்.
எண்ணூறு நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது ரஷ்யா – உக்ரைன் போர். உக்ரைனின் ஒரு ஏவுகணைக்கு, ஆறு ஏவுகணைகள் ரஷ்யத் தரப்பிலிருந்து பதிலடியாக வருகிறது. போரிட உக்ரைனில் படைகள் போதவில்லை. வெளிநாட்டில் இருக்கும் உக்ரைனியர்களின் தூதரக உதவிகளை நிறுத்திவிட்டு, தாய்நாடு திரும்பச் சொல்கின்றனர். “பற்றும் திறமையும் ஒருசேரக் கொண்டது உக்ரைனியப் படை” என்கிறார் அமெரிக்க அதிபர் பைடன். இரண்டுமுள்ள படைதான், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இன்று உயிருடன்தான் இல்லை. மக்களிடம் நம்பிக்கையும் இல்லை.
போர் தொடங்கிய முதல் வருடம் (2022), ரஷ்யாவை எப்படியும் விரட்டியடித்து விடுவோம் என்று அனைவருமே நம்பினர். கூடவே முன்னர் இழந்த கிரீமியாவையும் மீட்டுவிடலாம் என்றிருந்தனர். போலவே ரஷ்யப் படைகளை மேற்கு மற்றும் வடக்கு உக்ரைனில் நெருங்கவே விடவில்லை. வான்வழியாக மட்டுமே இதுவரை தலைநகர் கீவ் தாக்கப்பட்டிருக்கிறது. கார்கீவ், கெர்சோன் நகரங்களிலிருந்து ரஷ்யப்படைகள் பின்வாங்கின. அந்த வருடத்தின் கோடைத் தாக்குதல்கள் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தன. கடும் போராட்டத்திற்குப் பிறகு பாக்மூத் இழக்கப்பட்டது. அடுத்த கோடையில் மீட்டுவிடலாம் என்று நம்பியிருந்தனர்.
Add Comment