4. பாவி
திருமஞ்சனக் குளத்தின்* தென் கரையில் அமர்ந்திருந்தான். கிடந்த நிலையிலோ, உலவியவாறோ எப்போதும் அவனருகே இருக்கும் வராகங்கள் எங்கே போயினவென்று தெரியவில்லை. தனியாகவே இருந்தான். அவன் அங்கே இருந்தபடியால் குளத்துக்கு நீராட வந்தவர்கள், வேறு எதற்கோ அந்தப் பக்கம் வந்தவர்களைப் போல நகர்ந்து சென்றார்கள். அவன் யாரையும் பொருட்படுத்தவில்லை. சுற்றி நடப்பனவற்றோடு பிணைப்பற்றவனாகவே காணப்பட்டான். நீர்ப்பரப்பைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் சிந்தை தோய்ந்திருக்கவில்லை. அவன் அமர்ந்திருந்த கரையோரம் சிறிய, வெளிர் பழுப்பு நிற வரால் மீன்கள் கூட்டமாக நீந்திக்கொண்டிருந்தன. அதைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவன், தன் கால்களை அகட்டி, அமர்ந்திருந்த படிக்கல்லைக் குனிந்து பார்த்தான். அதில் இரண்டு கயல்களின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. சிரித்தான். கறுத்திருந்த முன்புறப் பல் தெரிந்தது. நீண்டு அழுக்கேறிக் கிடந்த இரு கரங்களின் நகங்களையும் குவித்து, செதுக்கியிருந்த உருவங்களில் ஒன்றன்மீது வைத்துக் கீறிப் பிளப்பது போல பாவனை செய்தான். பிறகு அம்மீனை ஏந்திக் குளத்தில் விடுபவனைப் போலக் கரங்களை உயர்த்திக் குவித்துச் சரித்தான். இப்போது தென் கரையில் கூட்டமாக அலையாடிக்கொண்டிருந்த வரால்கள் எதிரெதிராகக் குழு பிரிந்து நிற்கவும், வாளையொன்று தனது நீண்ட உடலைச் சிலுப்பிக்கொண்டு நீர்ப்பரப்பில் துள்ளி விழுந்து, உள்ளே சென்று மறைந்தது.
நல்ல வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. ஆனால் பரிதி தெரியவில்லை. எழுந்து சோம்பல் முறித்தான். திடீரென்று காரோண* வாசலில் ஒரு பெரிய கூட்டம் வந்து சேர்ந்து சிவ கோஷமிட்டது. கோயிலின் உள்ளே இருந்து சிவ பண்டிதரும்* வேறு சில அந்தணர்களும் வந்தார்கள். பார்த்துக்கொண்டே இருந்தவன், சட்டென்று உற்சாகமாக எழுந்து அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மறு கரையில் குளித்துக்கொண்டிருந்த சிலர் இதைக் கவனித்தார்கள். உடனே அவர்கள் கோயில் வாசலில் கூடியிருந்தவர்களைப் பார்த்து எச்சரிக்கும் விதமாகக் குரல் கொடுத்தார்கள்.
பாவி வருகிறான். கோயிலுக்குள் சென்றுவிடுங்கள்.










Add Comment