Home » உரி – 176
உரி • நாள்தோறும்

உரி – 176

176. சிகிச்சை

சித்திரை பிறக்கப் பத்து கிழமைகள் இருந்தபோதே தஞ்சப்புரி விழாக்கோலம் பூண்டுவிட்டது. சோழ நாடெங்கிலும் இருந்து துறந்தாரும் துறவாச் சிவனடியார்களும் சிவ பண்டிதர்களும் நாடெங்கும் இயங்கிக்கொண்டிருந்த சாலைகளில் இருந்து குருமார்களும் அவர்தம் மாணாக்கர்களும் அப்போதே வரத் தொடங்கியிருந்தார்கள். அவர்களுள் பலர் தஞ்சப்புரிக்கு முதல் முறையாக வருவோராக இருந்தார்கள். அருமொழி எடுப்பித்திருந்த ஆலயத்தினைக் குறித்து வாய்ச்சொல்லாகக் கேள்வியுற்றிருந்தவர்கள், குட முழுக்கைச் சாக்கிட்டு அம்மாபெரும் கலைச் சாகசத்தினை நேரில் கண்டு தரிசித்துச் செல்வதன் பொருட்டே தஞ்சப்புரியை நிறைக்கத் தொடங்கியிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தங்குமிடங்களைக் கண்டடைவதிலும் பசியாற்றிக்கொள்வதிலும் சங்கடங்களே இருந்துவிடலாகாதென்று அருமொழி மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தபடியால், முன்னர் இருந்தவை தவிரவும் கோட்டைக்கு உள்ளேயும் புறத்திலுமாக வேறு நான்கு இடங்களில் புதிய அன்ன சத்திரங்கள் விரைந்து கட்டி எழுப்பப்பட்டுப் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டிருந்ததை மக்கள் வியப்போடு பேசிக்கொண்டு சென்றதைக் காண முடிந்தது.

பழுதேறி இருந்த பாதைகள், நதியோரப் படித்துறைகள் யாவும் செப்பனிடப்பட்டிருந்தன. கோயில்களும் அவை சார்ந்து இயங்கி வந்த ஊட்டுப்புரைகளும் அறுபது நாழிகைகளும் திறந்தே இருக்கும்படிச் செய்யப்பட்டது. சிரிகாரிய அதிகாரிகளும் பூசாரிகளும் சாசனமெழுதுவோரும்* நாவிதர்களும்* செவிலியரும் சல்லியக் கிரியப் பண்ணுவோரும்* சுழற்சி முறையில் எப்போதும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். கூட்டுச் சேவகரும்* திருவலகிடுவாரும்* ஏரி வாரியம், தோட்ட வாரியத்தாரும் விடுப்பெடுக்காமல் பணி செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.

குட முழுக்குக்குப் பல சிற்றரசர்களும் பேரரசர்களும் அவர்தம் பரிவாரங்களுடன் வருவார்களென்பதால், அவர்களைக் கவனித்துக் கொள்ளவும் முகங்கோணாத வகையில் உபசரிப்புகளைச் செய்துகொடுக்கவும் ஒன்பது பெருந்தர அதிகாரிகளின் தலைமையில் நூற்றுவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் பேசிக்கொண்டார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!