ஒப்புக்கொள்ளாதே
இது நாள்வரை கிடைக்கவே கிடைக்காத அரிய வாய்ப்பு. சிறப்பாக முடித்துக் கொடுத்தால் நல்ல பெயர் கிடைக்கும். இல்லை எனில், இதுவரை சேர்த்துள்ள நற்பெயர் வீணாக வாய்ப்பும் உண்டு. இது போலச் சில வாய்ப்புகள் வந்து ஆசை காட்டும். எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒப்புக்கொள்ள வேண்டாம்.
யாராவது ஒரு வேலையைக் கேட்டால் உடனே சரி என்கிறோம். மறுத்தால் தவறாக நினைப்பார்களோ என அஞ்சுகிறோம். நல்லவர் என்ற பெயர் போய்விடுமோ எனத் தயங்குகிறோம். அந்த ஒரு நொடியில் சொன்ன சரி, பல மாதங்களை விழுங்கிவிடுகிறது. யாருக்காகவும் எந்த வேலையையும் யோசிக்காமல் ஒப்புக்கொள்ள வேண்டாம். இது சுயநலம் அல்ல.
நம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு என்கிற தெளிவு வேண்டும். நாம் முதலில் நமக்கே விசுவாசமாக இருக்க வேண்டும். அடுத்ததாக நம் குடும்பத்துக்கு. அதன் பிறகுதான் மற்றவர்கள். இந்த வரிசை மாறினால் குழப்பம் வரும். நம் உடல்நலம், நம் நேரம், நம் இலக்கு இவை நம் பொறுப்புகள். இவற்றை வேறு யாரும் நமக்காகச் சுமக்க மாட்டார்கள்.
ஒரு முடிவை எடுக்கும்போது அதன் விளைவு நம்மை எப்படிப் பாதிக்கும் என்று பார்க்க வேண்டும். அறிவுரை சொல்பவர்களுக்கு நம் நலனில் அக்கறை இருக்கலாம். அதில் ஐயமில்லை. ஆனால் விளைவை அனுபவிக்கப் போவது நாம்தான். அது நம்மைப் பாதிப்பது போல அவர்களைப் பாதிக்காது. நாம்தான் அந்த முடிவுடன் வாழ வேண்டும். அதனால் அவர்கள் கருத்து இரண்டாம் நிலைதான். கேட்டுக்கொள்ளலாம். எடை போட்டுப் பரிசீலிக்கலாம். ஆனால் இறுதி முடிவை நாமே எடுக்கலாம், எடுக்க வேண்டும்.











Add Comment