20. உலவும் பொருள்
எல்லாம் விளங்கியதென்று சொல்வதற்கில்லை. ஆனால் எது ஒன்றும் விளங்காமல் போகாதென்று நிச்சயமாகத் தோன்றியது. அம்மாய நிலப்பரப்பு இருந்த இடம் சோழ தேசமா, புறத்தே வேறு ஏதாவது தேசமா என்று என்னால் அறிய முடியவில்லை. அது நிலம்தானா என்கிற ஐயமும் இருந்தது. ஆனால் நீரும் நிலமுமில்லாத வெளி அல்ல. வெளியை நானறிவேன். அதன் சீதமும் தகிப்பும் எனக்குப் பரிச்சயமானவை. ஒன்று தெளிவாக விளங்கியது. பிரம்மத்தின் சிந்தைக்குள் இருந்தாலும் புலப்படாத புள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றன. அகந்தை கொள்ள ஒன்றுமில்லை.
ஆனால் அம்மர்ம மனிதன் சொன்னதன் மூலப் பொருளை என்னால் வகைப்படுத்த இயலவில்லை என்பது உண்மை. அது நிச்சயமாகக் குழப்பம் தந்தது. சார்வாகன் தஞ்சப்புரிக்குச் செல்வதில் இவனுக்கென்ன இடைஞ்சல்? அருமொழியின் மெய்க் காப்புச் சேனையில் சித்தர்களின் படைப்பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளதா என்ன? வினோதம். எதனால் அவன் தஞ்சப்புரிக்குச் செல்லக்கூடாதென்று அவனும் சொல்லவில்லை; அதை அவனது மாணாக்கர்களும் வினவவில்லை.










Add Comment