இயற்பெயர்: நரசிம்மன்
தொழில்: தமிழ் எழுத்தாளர்
இனம்: கன்னடம் – மராத்தி – (தாய் – தந்தை)
குடிமை: இந்தியர்
மனைவி: உமா நரசிம்மன்
தாய்: சேது பாய்
பிறந்தது: மெட்ராஸ்
பிறந்த நாள்: 19.06.1960
கல்லூரி: பச்சையப்பன் கல்லூரி
விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள் என இதுவரை 12 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன. மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
சி. நரசிம்மன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மாத்வ குடும்பத்தைச் சார்ந்த கன்னட – மராட்டியத் தாய் தந்தையருக்கு, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பிறந்தார். பள்ளிப்பருவம் பாண்டிச்சேரியில்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர், எனினும் பட்டதாரி அல்லர். கல்லூரி இறுதி ஆண்டுகளில் நவீன நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் நவீனத் தமிழ் இலக்கியச் சூழல் பரிச்சயப்பட, சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். 1982-83ல் பரந்த அனுபவம் தேடிக் காவியுடுத்தித் தேசாந்திரம் புறப்பட்டவர், இரண்டு முறையும் பாதியிலேயே திரும்ப நேர்ந்தது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமூக சேவகரான பாபா ஆம்தே தலைமையில், நிட் இந்தியா இயக்கத்தில் (KNIT-INDIA MOVEMENT) பங்கேற்றார். 1985 டிசம்பர் முதல் 1986 ஏப்ரல் வரை கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு, ஏறக்குறைய 5100 கிமீ சைக்கிளில் பயணம் செய்து, தேசிய ஒருமைப்பாட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 2013 முதல் 2018 வரை சென்னை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். மத்திய கலால், சரக்கு மற்றும் சேவை துறையில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து 2020ல் ஓய்வு பெற்றார்.
எழுத்து வாழ்க்கை
விமலாதித்த மாமல்லனின் எழுத்துலக அறிமுகம் 1981ல் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் ‘வலி’ கதை மூலம் ஆரம்பமானது. அதே ஆண்டில் கணையாழியில் வெளியான ’இலை’ மற்றும் ’பெரியவர்கள்’ குறுநாவல் வழியே தமிழ் இலக்கியச் சூழலின் பரவலான கவனத்திற்கு வந்தார். அறியாத முகங்கள் (1983), முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் (1986), உயிர்த்தெழுதல் (1994) தொகுதிகள் வெளியாகின.
1995 முதல் 2010 வரை எழுதாமல் இருந்த இவரது நூல்கள், சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் (2012), புனைவு என்னும் புதிர் வரிசை (2017 – 2023), எழுத்துக் கலை (2019), தவிப்பு (2017) விளக்கும் வெளிச்சமும் (2022).
இவரது கதைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கல்விப்புலத்தில்
‘சிறுமி கொண்டு வந்த மலர்’ திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
காலச்சுவடு இதழில் வெளியான ‘இணையமும் இலக்கியமும்’ எனும் கட்டுரை கேரள அரசின் பதினோராம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ளது.
பாராட்டுகள்
“மிகக் கவனமாகக் கதைகளை உருவாக்குபவர் விமலாதித்த மாமல்லன். சிறுகதைக்கே உரித்தான தனித்தன்மையின் மரபில் ஊட்டம் பெற்றவர். வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாத ஜீவன்களின் பரிதவிப்பு இவரது கதைகளின் மையம்” என்கிறார் சுந்தர ராமசாமி.
– கலைகள், கதைகள், சிறுகதைகள் – ‘மாதவன் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் முன்னுரை (1985)
”இவர் எடுத்துக் கொண்டுள்ள கருவெல்லாம் பெரும்பாலும் மனிதத்தின் வீழ்ச்சியை விவரித்து வாசகனையே இதற்கான முடிவுகளை கேட்கிறது” – ஆத்மாநாம்
– விமலாதித்த மாமல்லனின் சிறுகதைகள் கட்டுரை – மீட்சி 7 (பிப்ரவரி 1984)
“ஓர் அறிமுக எழுத்தாளனின் தயக்கத்துடனல்ல; தேர்ந்த கதையாளனின் சரளத்தன்மையுடன் அறிமுகமானவர் விமலாதித்த மாமல்லன்” – சுகுமாரன்
– விமலாதித்த மாமல்லன் கதைகள் முன்னுரை (2010)
”நவீன சிறுகதையில், ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட பெண்கள் துலக்கமாகத் தோன்றுவது இவர் கதைகளில்தான் என்று கூடச் சொல்லலாம்.” – விக்ரமாதித்யன்
– இருவேறு உலகம்
“உயிர்த்தெழுதல்” கதைத் தொகுப்பில் ஆசிரியரின் மொழிப் பிரயோகம் முக்கியமாய் கவனிக்கப்படவேண்டிய விஷயம். எஸ்ரா பவுண்டு கவிதை பற்றி சொல்லும் வரி இங்கு பொருந்துகிறது. வார்த்தைகள் Charged with meaning என்கிறார். மந்திரம் போல் வேண்டுமடா சொல்லினின்பம் என்றாரே பாரதி. நெருப்பென்றால் வாய் சுட்டுவிட வேண்டும் என்கிறாரே லா. ச. ரா அதுபோலவே விமலாதித்த மாமல்லன் வார்த்தைகளை கவிதை அவற்றிற்கு தரும் கௌரவத்துடன் பயன்படுத்துகிறார். – ஐராவதம்
– நவீன விருட்சம் சிற்றிதழில்
‘சிறுமி கொண்டுவந்த மலர்’ தான் தமிழின் முழுமையான மாய யதார்த்தக் கதை. இதில் வட்டிக்கடை சேட் ஒருவனிடம் தங்கத்திலான பூ ஒன்றை அடமானம் வைத்துப் பணம் வாங்கிப்போகிறாள் ஒரு சிறுமி. அந்தப் பூ தானே ரோஜாவாக மாறிவிடுகிறது. மாமல்லனின் இக்கதை பேராசை மனிதனை வீழ்ச்சியுறவே செய்யும் என்பதைச் சுட்டிக்காட்டுவது போல எனக்குத் தோன்றுகிறது. வடிவ நேர்த்தியும் சிறப்பான மொழிநடையும் கொண்ட முக்கியமான சிறுகதையிது”
– எஸ். ராமகிருஷ்ணன் – 100 சிறந்த சிறுகதைகள் முன்னுரை (2013)
சுட்டிகள்:
* விமலாதித்த மாமல்லனின் புத்தகங்கள்
* விமலாதித்த மாமல்லனின் கிண்டில் மின்நூல்கள்
* விமலாதித்த மாமல்லனின் இணையதளம்
* விமலாதித்த மாமல்லனின் ஃபேஸ்புக் பக்கம்
* மெட்ராஸ் பேப்பரில் விமலாதித்த மாமல்லன்








