11. கவனகர்
கோகலேவின் நினைவாற்றலையும் அதை வளர்த்துக்கொள்வதற்கு அவர் மேற்கொண்ட கடும் பயிற்சியையும் இன்றைக்கு நாம் வியப்புடன் பார்க்கிறோம். ஆனால் அன்றைக்கு, அவரோடு படித்த மற்ற பையன்கள் அதை ஒரு பெரிய திறமையாக நினைக்கவில்லை, அவரைக் கிண்டலாகத்தான் பார்த்தார்கள்.
சிலர் கோகலேவைச் ‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’ என்று கிண்டலடித்தார்கள். இன்னும் சிலர் ‘அவனுக்கு ஒன்றும் தெரியாது. புத்தகத்தில் உள்ளதை வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்பிப்பான். அவ்வளவுதான்’ என்றார்கள். இதையெல்லாம் கோகலே பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ‘கொக்குக்கு ஒன்றே மதி’ என்பதுபோல் அவர் உண்டு, அவருடைய புத்தகங்கள் உண்டு, பேச்சுப் பயிற்சி உண்டு, அவ்வளவுதான்.
இன்னும் சில மாணவர்கள் கோகலேவிடம் நட்பாகப் பழகுவதுபோல் அவரைக் கேலி செய்வார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு பையன் கோகலேவிடம் வந்து, ‘கோபால், இந்தப் புத்தகத்தில் இந்தச் சொல் எங்கெல்லாம் வந்திருக்கிறது என்று கொஞ்சம் சொல்லேன்’ என்று கேட்பான். கோகலே அந்தக் கேள்வியைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அந்தப் புத்தகத்தில் அந்தக் குறிப்பிட்ட சொல் வந்திருக்கும் இடங்களையெல்லாம் வரிசையாகப் பட்டியலிடத் தொடங்குவார். அதைப் பார்த்து எல்லாரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.










Add Comment