சென்னை உணவுத் திருவிழா டிசம்பர் 20 முதல் 24ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்குபெற்ற முதல் நிகழ்ச்சி இது. என்னென்ன உணவுகள் இருந்தன? ஏற்பாடுகள் எப்படிச் செய்யப்பட்டிருந்தன? என்பதை அறிய உணவு திருவிழாவில் நாமும் பங்குபெற்றோம்.
அவ்வப்பொழுது சமைத்துத் தரப்படும் உணவுகள், ஏற்கனவே தயாராகி பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட உணவுப்பொருள்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருள்கள் என அனைத்தும் விற்பனைக்கிருந்தன. சென்னையில் வசிக்கும் மக்களில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம். ஒவ்வொரு மாவட்டத்திற்குமான சிறப்பு உணவுகள் அனைத்தும் இந்த உணவுத் திருவிழாவில் சூடாகவும் சுவையாகவும் பரிமாறப்பட்டன. தங்கள் ஊர் உணவைச் சென்னையிலேயே ருசிப்பதற்கான நல்ல வாய்ப்பாக மக்கள் இதனைப் பயன்படுத்திக்கொண்டனர்.
இந்த உணவுத் திருவிழாவைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கி வைத்தார். அரசு சார்பில் நடத்தப்படும் விழா என்பதால் அரசுத்துறை அதிகாரிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் நடந்துகொண்டதை உணரமுடிந்தது. மொத்தமாகப் பணம் செலுத்தி ஓர் அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த அட்டையில் முன்கூட்டியே பணம் நிரப்பிக்கொண்டால் அதைப் பயன்படுத்தி அனைத்து உணவு அரங்கங்களிலும் உணவைப் பெற்றுக்கொள்ளலாம். இதுதான் ஏற்பாடு. இந்த அட்டைகளை விநியோகிக்கும் அரங்கங்களும் உணவு விற்பனையகங்களும் ஒரே இடத்தில் இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. உணவுகளை வாங்கிக்கொண்டு அமர்ந்து சாப்பிடுவதற்கான ஏற்பாடுகளும் இல்லை. இதனால் உணவினை வாங்கிக்கொண்டு கூட்டம் கூட்டமாகச் சாலையில் அமர்ந்து மக்கள் உணவருந்தியதைப் பார்க்க முடிந்தது.
பொதுவாக அதிக மக்கள் கூடும் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை சென்னை தீவுத்திடலில் நடத்துவதுதான் வழக்கம். மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெறும் பகுதிகளில் மெரினா கடற்கரையும் முக்கியமானதாக இருக்கிறது. ஆனாலும் இந்த நிகழ்வை விவேகானந்தர் இல்லத்துக்கு நேரெதிரே இருக்கும் இடத்தில் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
Add Comment