புது வருட கேலண்டர் வந்ததும் முதலில் தேடிப் பார்க்கும் விஷயம், தீபாவளி எப்போது வருகிறது என்பதுதான். பட்டாசுச் சத்தம், மத்தாப்புப் பொறிகள். சம்புடத்தில் செய்துவைக்கப்பட்ட முறுக்கு, லட்டு. பித்தளை அண்டாவில் கொதிக்கும் வெந்நீர். தீபாவளி என்னும் சொல்லைப் பார்த்ததுமே மனதுக்குள் விரியும் உதிரிக் காட்சிகள் இவை. தீபாவளிக்கென்று தனியாக ஒரு வாசனையும் உண்டு. அது, அதிதூயப் புத்தாடைகளை நாசூக்காகப் பிரிக்கும்போது கும்மென்று நாசியைத் துளைக்கும் புத்தாடை மணம்.
முதல் தூறல் பூமியில் விழும்போது எழும் மண்வாசனையைவிட இந்தப் புத்தாடை வாசனை புனிதமாகத் தோன்றியிருக்கிறது. காரணம், அதை வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே அனுபவிக்க முடியும். சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை, உடை வாங்குவது என்றால் அது வருடத்துக்கு ஒருமுறைதான். தீபாவளிக்கு மட்டும்தான். தையல்காரர்களை அப்போது கையில் பிடிக்க முடியாது. ஒரு மாதத்துக்கு முன்னரே கொடுத்தாலும், ஒரு வாரம் அலையவிட்டு தீபாவளிக்கு முதல் நாள்தான் தைத்துக் கொடுப்பார்.
வளர்ச்சியை உத்தேசித்து உடைகள் பெரும்பாலும் தொளதொளவென்றே தைக்கப்படும். மடித்துவிடத் தேவையில்லாத அளவுக்கு வளரும்போது அவை தம்பி தங்கைகளுக்கு மடைமாற்றி விடப்பட்டிருக்கும். பின்னர் ஆயத்த ஆடைகள் பரவலாகக் கிடைக்கத் தொடங்கின. அப்போதும் ஒரு சுற்றளவு கூடுதலாக வாங்கி, தையல்காரரிடம் கொடுத்து ஒரு விரல்கடை பிடித்துப் போடுவதுதான் வழக்கம்.














Add Comment