கட்டடங்கள் எல்லாம் சிமெண்ட்டும் கல்லும் குழைத்துச் செய்யப்பட்ட கட்டுமானங்கள் மட்டும் அல்ல. சில நம் உயிரோடும் உணர்வோடும் பிணைந்தவை. அதனாலேயே இரட்டைக்கோபுரங்கள் தாக்கப்பட்டது இன்னமும் அமெரிக்காவில் வருத்தமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. சீக்கியரின் ஆலயத்திற்குள் இந்திய இராணுவம் நுழைந்ததும்கூட. மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பாராளுமன்றத்தில் இந்திய மக்கள் நுழைந்து பிரதமரைத் தாக்கினால் எத்தகைய அதிர்ச்சி உண்டாகுமோ அப்படியான ஓர் அதிர்வலையை அமெரிக்கா சந்தித்தது 2021இல்.
பெர்லின் சுவர் இடிப்பு முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பலவீனத்தைக் காட்டியது போல், ஜனவரி 6 அன்று காப்பிடல் ஹில்லில் அமெரிக்க மக்களாலேயே நடத்தப்பட்ட தாக்குதலும், பெரும்பான்மையான வாக்காளர்களின் விருப்பத்தைத் தகர்க்க பலத்தைப் பயன்படுத்த முயன்ற கும்பல், துணை அதிபர் பென்ஸைத் தூக்கிலிடு என்ற முழக்கமும் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முறையாக நடந்து முடிந்த ஒரு தேர்தலின் முடிவுகளை எதிர்கொள்ள முடியாமல் ஓர் அதிபரே முன்னின்று நிகழ்த்திய தாக்குதல் நமது ஜனநாயகத்தின் பலவீனத்தைக் காட்டியது.
முதல் முறை நியூயார்க்கில் அதிபர் டிரம்ப்பின் மீது சட்டப்படி குற்றம் சுமத்தப்பட்டபோதும் கைது செய்யப்பட்டபோதும், ஒரு முன்னாள் அதிபரையே கைது செய்யக்கூடிய அளவில் அமெரிக்கச் சட்டம் அனைவரையும் சரி சமமாக நடத்துகிறது என்ற பார்வை ஒரு புறம், அதை ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக எப்படித் தனக்குச் சாதகமாக அனுதாப வாக்குகளாக மாற்ற முடியுமா என வரலாறு காணாத வகையில், தான் தேர்ந்தெடுத்த நீதிபதிகள், அதுவரை தன்னுடன் உழைத்த நீதிமன்றத்தையே தாக்கிப் பேசிய டிரம்ப், இதில் ஏதோ சதி இருக்கிறது என நம்பிய அவருடைய ஆதரவாளர்கள், தொடர்ந்து உழைத்த ஊடகங்கள், அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளால் ஆர்வம் குறைந்து போனார்கள்.
Add Comment