சோதனைக்கால தேவதை
திட்டத்தின் பாதை கனிந்துவிட்டது. பெயர் வைத்தாகிவிட்டது. குழு அமைந்துவிட்டது. பல்கலைக்கழக அங்கீகாரம் இருக்கிறது. மாணவர்கள், பேராசிரியர்கள், கணினி ஆர்வலர்கள், பயனாளர்கள் கொண்டாடுகிறார்கள். இனி எல்லாம் சுகமே என்று மும்முரமாக ஆராய்ச்சியில் இருந்தனர் லாரியும், செர்கேயும். ஆனால் ஓர் உன்னதக் காரியத்தைக் காலம் அப்படி எளிதாகவா விட்டுவிடும்..? சோதனைகளைத் தாண்டாத சாதனைகள் ஏதும் உண்டா? ‘வா மகனே’ என்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தது, அடுக்கடுக்கான சோதனைகளுடன்.
கூகுள் பெரிய கனவுத்திட்டம்தான். ஆனால் என்ன இருந்தாலும் அப்போது அது ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆதரவில் இயங்குவதாதலால், மலர் மாலைகளுக்கு தோள் கொடுப்பது போலவே, கண்டனங்களுக்கும், கூக்குரல்களுக்கும், செவியும் கழுத்தும் பல்கலைக்கழகமே கொடுக்க வேண்டியிருந்தது.
கூகுள் திட்டத்தைப் பொறுத்த அளவில் இரண்டு விஷயங்கள் அவர்கள் கழுத்தில் கத்தி வைத்தன. ஒன்று பல்கலைக்கழகத்தின் இணையத்தின் பெரும்பங்கினை அன்று கூகுள் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. எல்லா இணையப் பக்கங்களையும் தரவிறக்க, சோதனை செய்ய, மீண்டும் நிரல்களை அப்லோட் செய்ய என இணைய இணைப்பின் பெரும்பகுதியை இதுவே எடுத்துக் கொண்டதில், பிற மாணவர்கள் அதைக் குறித்துக் குறை கூறினார்கள். இதுவாவது உள்நாட்டுக்குழப்பம், எப்படியாவது சமாளித்து விடலாம். அதைவிடப் பெரிய ஒரு வெளிநாட்டுக் கலகமும் வந்த போதுதான் பல்கலைக்கழகம் சற்று தடுமாறியது.
Add Comment