கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ராணுவ மோதலைத் தீர்ப்பதில் இந்தியாவும் சீனாவும் ஓர் உடன்படிக்கைக்கு வந்துள்ளன. டெப்சாங் சமவெளி, டெம்சோக் பகுதிகளில் இரு நாடுகளும் பழையபடி ரோந்துப் பணிகளில் ஈடுபடலாம் என ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லைப் பிரச்சினைக்கு இந்த ஒப்பந்தம் தீர்வு காணும் என்று இந்தியா நம்புகிறது.
சீனா இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று. ஆனால் இந்தியாவும் சீனாவும் எப்போதும் நட்புறவில் இருந்ததில்லை. நட்புறவு என்பது அதிகம்தான். இந்தியா பாகிஸ்தான் போல எப்போதாவது சுமுக உறவில் கூட இருந்ததில்லை. குறிப்பாக சீன எல்லையில் இருக்கும் இந்திய மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசங்களில் எல்லைத் தகராறுகளும் சீன ராணுவ அத்துமீறல்களும் எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதனால் 1993ஆம் ஆண்டு இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாடு உண்மையான கோடு (Line of Actual Control – LAC) நிறுவப்பட்டது. இரு நாடுகளும் பேசி, சம்மதித்து இந்தக் கோடு போடப்பட்டது. கோடு என்றால் எல்லைகளை வகுத்துப் பிரிப்பது. குறுக்கே ஒரு எல்லைக் கோடு போட்டும் பிரச்சினை தீரவில்லை. காரணம் எல்லைக் கோடு சரியாக வரையறுக்கப்படவில்லை. எல்லைக் கட்டுப்பாடு உண்மைக் கோடு 3488 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இந்தியா கருதுகிறது. அதே சமயம் சீனா 2000 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகக் குறிப்பிடுகிறது. சீனாவின் வட கிழக்குப் பகுதியில் இந்தியாவின் 90000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா உரிமை கோருகிறது. அதே நேரம் சீனா ஆக்கிரமித்துள்ள அக்ஸாய் சின் பகுதியில் உள்ள 38000 சதுர கிலோ மீட்டர் நிலம் லடாக்கின் ஒரு பகுதி என்று இந்தியா கூறுகிறது.
Add Comment