டிசம்பர் 18, 2010 அன்று ஆப்பிரிக்க தேசமான துனிஷியாவில் மக்கள் புரட்சி வெடித்தது. ஓர் எளிய தள்ளுவண்டி பழக்கடைக்காரர், வாழ முடியாமல் தற்கொலை செய்துகொண்டதன் தொடர்ச்சியாக, மக்கள் பொங்கி எழுந்தார்கள். அரசுக்கு எதிரான தங்கள் அதிருப்தியை ட்விட்டரில் காட்ட ஆரம்பித்து, அது வெகு வேகமாகப் பரவி மக்கள் புரட்சியானது.
துனிஷிய மக்கள் புரட்சி ஓர் ஆட்சி மாற்றத்துக்கு வித்திடவே, அடுத்தடுத்துப் பல்வேறு தேசங்களில் அதே போன்ற மக்கள் புரட்சிகள் நடக்க ஆரம்பித்தன. அல்ஜீரியா, மேற்கு சகாரா, மாரிடானியா, ஜோர்டன், லிபியா, ஓமன், ஏமன், சிரியா, மொராக்கோ என்று – ஆப்பிரிக்காவில் தொடங்கி அநேகமாக மத்தியக் கிழக்கு நிலப்பரப்பின் இரான் எல்லை வரை எங்கு பார்த்தாலும் புரட்சி. எல்லா இடத்திலும் சிக்கல். 2011 முழுவதும் மேற்கில் சந்திராஷ்டமம்.
நமக்கு இந்த விவகாரங்கள் அதிகம் செய்தியாகவில்லை. வரும். நாளிதழ்களின் ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு மூலைச் செய்தியாக. பலர் அவற்றைக் கவனித்திருக்கக்கூட மாட்டார்கள். நமக்கெல்லாம் பெட்ரோல் விலையும் வெங்காய விலையும் நூறைத் தாண்டினால்தான் உலக நினைப்பே வரும்.
நம்மை விடுங்கள். அதே 2011-இல் இலங்கை மக்கள் இந்தப் புரட்சிகளையெல்லாம் கவனித்திருப்பார்களா? சரியாகப் பத்தாண்டுகளுக்குப் பிறகு நாமும் இப்படி ஒரு புரட்சியில் ஈடுபட வேண்டி வரும் என்று எண்ணிப் பார்த்திருப்பார்களா? அன்றைய காலக்கட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு அவர்களுடைய பிரச்னையே பெரும் பிரச்னை. ஈழத் தமிழர் அல்லாத பிற இலங்கையருக்கு ஈழத் தமிழரே பிரச்னை.
இன்றைக்குச் சூழல் வேறு. காணக் கிடைக்கும் காட்சிகள் வேறு. கொழும்பு காலி முகத் திடல் இப்போது போராட்டக்காரர்களின் நிரந்தர இருப்பிடமாகியிருக்கிறது. பாண்டிச்சேரியில் உள்ள கடற்கரையோரச் சாலையைப் போன்ற இடம்தான். இந்தப் பக்கம் இந்தியப் பெருங்கடல். அந்தப் பக்கம் அரசாங்க அலுவலகங்கள். நடுவே நீளும் பரந்த நிலப்பரப்பு ஒரு காலத்தில் குதிரைப் பந்தயங்கள் நடத்துவதற்குப் பயன்பட்டது. பிறகு பெரும் பணக்காரர்களின் கோல்ஃப் மைதானமாக இருந்திருக்கிறது. இப்போது கூடாரமடித்துத் தங்கி, புரட்சி செய்துகொண்டிருக்கிறார்கள்…