41. சட்டத்தை மீறுவேன்
1915 மார்ச் 12. காந்தியும் கஸ்தூரிபா-வும் ஹௌரா ரயில் நிலையத்தில் வந்திறங்கினார்கள்.
‘ஹௌரா’ என்பது இன்றைய மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கொல்கத்தாவுடன் இணைந்த இரட்டை நகரம். இந்த இரு நகரங்களையும் இணைக்கிற கம்பீரமான ‘ஹௌரா பால’த்தை நாம் பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்.
அந்த ஹௌரா பாலத்துக்கு மிக அருகில்தான் ஹௌரா ரயில் நிலையம் இருக்கிறது. அது அன்றைக்கும், இன்றைக்கும் இந்தியாவின் முதன்மையான, மிகப் பெரிய, ஏராளமான மக்கள் பயன்படுத்துகிற பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்று.
போல்பூரில் காந்தியை அமைதியானமுறையில் கொண்டாடிய வங்காளிகள் ஹௌரா ரயில் நிலையத்தில் அவருக்குப் பிரமாண்டமான வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் காலை நேரத்திலேயே சுமார் ஆறாயிரம் பேர் அங்கு கூடியிருந்தார்கள். வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான பூபேந்திரநாத் பாசு தலைமையில் அந்நகரின் முதன்மையான தலைவர்கள் காந்தியையும் கஸ்தூரிபா-வையும் அன்புடன் வரவேற்றார்கள். அவர்களை ஊருக்குள் அழைத்துச்செல்வதற்கென ஒரு குதிரை வண்டி ஆயத்தமாக நின்றிருந்தது.
Add Comment