63. கேட்க விரும்பாத விஷயங்கள்
மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் காந்தி தாழ்த்தப்பட்டவர்கள் நலனைப்பற்றி இவ்வளவு தீவிரமாகப் பேசியது ஏன்? அதற்கென இந்து மதத்தையே பகைத்துக்கொள்வேன் என்று முழங்கும் அளவுக்கு அவர் உணர்ச்சிவயப்பட்டது ஏன்?
முந்தைய நாள் தரங்கம்பாடியில் காந்தியைச் சந்தித்துப் பேசிய தாழ்த்தப்பட்ட இனத்து மக்கள் தங்களுடைய நிலையைப்பற்றி அவரிடம் உருக்கமாகச் சொல்லியிருந்தார்கள். மறுநாள், அதாவது, மயிலாடுதுறை கூட்டம் நடைபெற்ற அதே நாளில் அவர் பொறையாரில் தாழ்த்தப்பட்ட மக்களுடைய குடியிருப்பைப் பார்த்திருந்தார். அதுவும் அவருடைய நெஞ்சை உலுக்கியிருந்தது, அவரை ஆழமாகச் சிந்திக்கச்செய்திருந்தது. ‘காந்தி தாழ்த்தப்பட்ட இனத்தவர்களின் முன்னேற்றத்துக்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொள்ளவேண்டும் என்று தீர்மானித்த இடம் பொறையாராகதான் இருக்கவேண்டும்’ என்கிறார் அவ்வூரைச் சேர்ந்த வரலாற்றாளர் மரியா லஜார்.
‘மயிலாடுதுறை மக்களாகிய நீங்கள் எனக்குக் கொடுத்த அன்புக்குப் பதிலாக, நீங்கள் கேட்க விரும்பாத சில விஷயங்களை நான் சொல்லப்போகிறேன்’ என்றார் காந்தி, ‘பிராமணர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள்தான் சமூகத்தின் உயர்ந்த நிலையை உரிமையோடு அனுபவிக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன். அது உண்மையா? இன்றைக்கும் அவர்கள் அப்படி ஓர் உயர்நிலையை அனுபவிக்கிறார்களா? ஆம் எனில், இந்தப் பாவம் அவர்கள் தோளில்தான் விழும்.’
‘இந்த ஊர்ப் பிராமணர்களுக்கு அனைவரையும் சமமாக நடத்தும் மனம் உண்டா? அவர்கள் அப்படிச் செய்தால் மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்களும் அவர்களைப் பின்பற்றமாட்டார்களா என்ன? ஒருவேளை, உண்மையாகவே தாங்கள் பிறப்பால் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் பிராமணர்களுக்கு இருந்ததென்றால், அவர்கள்தான் இந்த நாட்டை அழிக்கிறவர்கள்.’
Add Comment