70. மாதம் பத்து ரூபாய்
தன்னுடைய ஆசிரமத்தில் முதலில் நாற்பது பேர் தங்குவார்கள் என்று காந்தி மதிப்பிட்டார். இந்த நாற்பது பேரில் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள், காந்தியின் இந்தியப் பயணத்தின்போது அவரைச் சந்தித்து ஆசிரமத்தில் இணைந்தவர்கள், இணைவதாகச் சொன்னவர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள். இந்த எண்ணிக்கை விரைவில் ஐம்பதாக உயரும் என்று காந்தி எதிர்பார்த்தார்.
இத்துடன், ஆசிரமத்தைப் பார்க்க வருகிறவர்கள், காந்தியைச் சந்திக்க வருகிறவர்கள், ஆசிரம உறுப்பினர்களுடைய உறவினர்கள் என்று மாதந்தோறும் சுமார் பத்து விருந்தினர்களும் அங்கு தங்குவார்கள் என்று காந்தி எண்ணினார், இவர்கள் அனைவரும் தங்குவதற்கு ஏற்ற வசதிகளைச் செய்ய விரும்பினார். இதற்குச் சுமார் ஐம்பதாயிரம் சதுர அடி பரப்புள்ள ஒரு வீடு தேவைப்படும் என்று அவருக்குத் தோன்றியது.
அந்த வீட்டுக்குள் என்னென்ன அறைகள் இருக்கவேண்டும்?
மூன்று சமையலறைகள், தனியாக உள்ளவர்களும் குடும்பத்துடன் உள்ளவர்களும் தனித்தனியாகத் தங்குவதற்கான அறைகள், ஆயிரம் புத்தகங்களைக் கொண்ட நூலக அறை, அதற்கேற்ற அலமாரிகள்.
Add Comment