ஆயிரம் நாள்களை நோக்கிப் போகும் பரந்தூர் சுற்றுப்பகுதி மக்களின் போராட்டம் நடிகர் விஜய் தலையிட்டதால் சற்றே கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிமூன்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராடி வருகின்றனர். வீடுகள், விவசாய நிலங்கள், நீர் நிலைகள் உள்படச் சுமார் ஐயாயிரத்து ஐந்நூறு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இரண்டு முக்கியமான கோணங்கள் இவ்விவகாரத்தில் உள்ளன. வளர்ச்சியால் நலன் பெறும் மக்கள், அதன் பொருட்டு பாதிக்கப்படும் மக்கள்.
முன்பெல்லாம் அரசாங்கம் ஒரு திட்டத்தைக் கொண்டுவரும்போது இவ்வளவு அதிக மக்கள் எதிர்ப்பைச் சந்தித்ததில்லை. இப்போதுமே கூட வளர்ச்சித் திட்டங்கள் வேண்டும் எனப் போராடும் நிலையில் பல இந்திய மாநிலங்கள் உள்ளன. ஐந்நூறு பேருக்கு வேலை கிடைக்குமெனில் என் நிலத்தை இலவசமாகவே தருகிறேன் என்று தானாக முன்வந்து கொடுத்த நிகழ்வுகள் எல்லாம் தமிழ்நாட்டிலும் நடந்துள்ளன. காலப்போக்கில் பலன்கள் மக்களைவிட அரசியல்வாதிகளிடம் அதிகம் போய்ச் சேர்ந்ததாக எண்ணுவதால் அப்படித் தானமாகக் கொடுப்பது வழக்கொழிந்துவிட்டது.
அரசாங்கம் நிலத்தைக் கையகப்படுத்துவதென முடிவெடுத்துவிட்டால் மக்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இழப்பீட்டுத் தொகையை உயர்த்திக் கேட்க வேண்டுமானால் சட்டத்தின் துணையை நாடலாம். அதிலும் முன்னுதாரணங்கள் சரியாக இல்லை. மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் நெய்வேலி சுரங்கம் வரை நிலத்தை எடுத்துக்கொண்டு வாக்குறுதிகளைக் கொடுத்த அரசாங்கம், முறையான இழப்பீட்டை மக்களுக்கு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
Add Comment