உணவு, உடை, உறைவிடம் என்கிற மூன்று அடிப்படைகளில் சிக்கல் இல்லாத நிலை உண்டாகும்போது கேளிக்கை என்னும் நான்காவது அம்சத்தைத் தேடிச் செல்வதே மனித குலத்தின் இயல்பாக ஆதிகாலம் முதல் இருந்து வந்திருக்கிறது. போதை என்பதைக் கேளிக்கையின் ஓரங்கமாக நாம் கொள்ள இயலும். ஓர் அரசு இதனை மட்டுப்படுத்தலாம், தேட வைக்கலாம், விலை கூட்டி வைத்து, வாங்கும் அளவைக் குறைக்கப் பார்க்கலாமே தவிர முற்றிலும் ஒழித்துவிட முடியாது. அப்படிச் செய்யும்போது கள்ளச் சந்தை திறக்கும். அபாயங்கள் அதிகரிக்கும். மரணங்கள் பெருகும். மேலும் பல எதிர்பாராத சிக்கல்களை ஆள்வோர் சந்திக்க நேரிடும்.
சில நாள்களுக்கு முன்னர் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக முதலமைச்சர் நிதி உதவி செய்து கேலிக்கு உள்ளானதை எண்ணிப் பார்க்கலாம். திண்டாடி நிற்கும் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை மதிக்கலாமே தவிர, அச்செயல்பாட்டின் அபத்தத்தை விமரிசிக்காமல் இருக்க முடியாது.
Add Comment