உங்கள் மகள்
அன்று காலை பத்து மணிக்கே அங்கு சென்றுவிட்டேன். நூலக வளாகத்துக்குள் நுழைந்துவிட்டால் பசி என்பதே மறந்துவிடும். ஒருவேளை பசித்தாலும் அந்தச் சூழல் அதைப் பொருட்படுத்த விடாது. எனினும், குளிரூட்டப்பட்ட அந்த அமைதியான சூழலில் அமர்ந்திருக்கும்போது, இதமாக ஒரு கோப்பை வெந்நீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். ஆனால், அங்கிருக்கும் ஒரே சிற்றுண்டிச் சாலையில் , நான்கு புத்தகங்களின் விலையைத் தந்தால்தான் ஒரு ‘ஹாட் சாக்லேட்’ கிடைக்கும்.
மற்றபடி இந்த நூலகத்துக்கு வருவதற்கு எவருக்கும் எந்தச் செலவும் இல்லை. நாள் முழுவதும் தடையின்றி அமர்ந்து படிக்கலாம். ஆவணங்களை நகலெடுப்பது உள்ளிட்ட அனைத்தும் இலவசம். அந்த விலை உயர்ந்த ஹாட் சாக்லேட்டை மனத்திலிருந்து விலக்கிவிட்டு, கையிலிருந்த தண்ணீர் பாட்டிலுடன் வெளியே வந்தேன். அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து, குளிரில் உறைந்திருந்த என் உடலின் வெப்பநிலை இயல்புநிலைக்குத் திரும்பும் வரை காத்திருந்தேன். குளிர் தணிந்ததும் மீண்டும் நான் வழக்கமாக அமரும் பொது நூலகப் பகுதிக்குச் சென்றேன்.
இந்த நூலகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. மற்ற நூலகங்களைப் போலவே மெத்தென்ற தரைவிரிப்புகளும், விதவிதமான சோஃபாக்களும் இங்குண்டு. கூடவே, வலதுபுறம் திரும்பினால் வளைந்து வளைந்து குருவிக்கூடுகளைப் போல அமைக்கப்பட்டிருக்கும் தனித்தனி இருக்கைகள் கண்ணைக் கவரும். அதன் உள்ளே அமர்ந்துவிட்டால், வெளியே இருப்பவர்களுக்கு நாம் இருப்பது தெரியாது. மடிக்கணினி வைக்கச் சிறிய மேஜை, சாய்ந்து அமரச் சொகுசான இருக்கை என அது ஒரு தனி உலகம். அங்கு வரும்போதெல்லாம், அந்தப் பகுதி காலியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான் மற்ற இடங்களைத் தேடுவேன். அன்று என் அதிர்ஷ்டம், எனக்கான ஒரு ‘கூடு’ காத்திருந்தது.










Add Comment