ஓட முடியாதவர்கள்
வசந்த காலம் வந்துவிட்டால் துபாயின் முகமே மாறிவிடும். இதமான சீதோஷ்ண நிலை நகரத்துக்குப் புதிய பொலிவைத் தரும். நூலகமும் அதற்கு விதிவிலக்கல்ல. மாலை நேரங்களில் நூலகத்தின் பின்புறம் பரந்து விரிந்துள்ள புல்வெளியில் வண்ணமயமான ‘பீன் பேக்’கள் (Bean bags) வரிசையாகப் போடப்பட்டிருக்கும். தூரத்திலிருந்து பார்க்கும்போது அவை சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களில் பெரிய கூழாங்கற்கள் புல்வெளியில் சிதறிக் கிடப்பது போல மாயத் தோற்றத்தைத் தரும். நீரோடையை ஒட்டி ஆங்காங்கே இரண்டு மூன்று தேநீர்க் கடைகள் திறக்கப்பட்டிருக்கும்.
நூலகத்தின் அமைதிக்குள் மூழ்கி இரண்டு, மூன்று மணிநேரம் தொடர்ந்து வாசிப்பவர்கள், மாலை வேளையில் சற்று இளைப்பாற இங்கு வருவது வழக்கம். இங்கு தேநீர் மட்டுமின்றி, பசியைத் தூண்டும் விதவிதமான சாண்ட்விச்களும் கிடைக்கும். அவற்றை வாங்கிக் கொண்டு பீன் பேக்கில் சரிந்து அமர்ந்து, மெல்ல ஓடும் நீரோடையைப் பார்த்தபடி ரசித்துச் சாப்பிடுவது தனி அனுபவம்.
இங்கு அமைக்கப்பட்டிருந்த உணவகம் பார்ப்பதற்கு ஒரு பெரிய வேனின் நடுவில் வாசல் வைத்தது போலக் காட்சியளித்தது. இங்கு வேலை செய்யும் மரியா, ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இந்த வசந்த காலத்தில் மட்டும் உணவகத்தைப் பார்த்துக்கொள்ள நிறுவனம் அவரை அனுப்பியுள்ளது. மரியா இயல்பிலேயே சுறுசுறுப்பானவர். பெரிய வணிக வளாகங்களின் இரைச்சலுக்கும் பரபரப்புக்கும் பழகிய மரியாவுக்கு இந்த நூலகத்தின் அமைதி ஆரம்பத்தில் ஆச்சரியமாக இருந்தது. இங்கு வருபவர்கள் அனைவரும் உணவருந்துவார்கள் என்று சொல்ல முடியாது. இருப்பினும் மரியா மகிழ்ச்சியுடன் இங்கு பணியாற்றச் சம்மதித்ததற்கு ஒரே காரணம் புத்தகங்கள்.











Add Comment