81 குழப்பம்
நம்பியை நடுத்தெருவில் விட்டுவிட்டு வந்துவிட்டானே தவிர அவர் சொன்ன வார்த்தைகள் அவனை விடுவதாக இல்லை. ஒருவேளை அவர் சொல்வது உணமையோ. அந்தக் கதையைப் படித்திருக்காவிட்டால் நாம் இந்தக் கதையை எழுதியிருக்கதான் மாட்டோமோ. இல்லை. ஒரேயடியாய் அப்படிச் சொல்லிவிட முடியாது. அப்படிப் பார்க்கபோனால் நாம் இதுவரை பார்த்திருக்கும் படங்கள் எத்தனை. சப் டைட்டிலில் ஓடுகிற ஒவ்வொரு வார்த்தையும் புரிகிறது என்று சொல்லமுடியாவிட்டாலும் கதை ஒட்டுமொத்தமாகப் புரிகிறதுதானே. பார்க்கிற உலக சினிமாக்களில் இருந்தெல்லாம் திருடி எழுதுவதாக இருந்தால் இந்நேரம் எவ்வளவு எழுதித் தள்ளியிருக்கலாம். இல்லையே நாம் அப்படியான ஆள் இல்லையே. நம்பிக்கு ஊர்பாசம் கொஞ்சம் அதிகம் என்பது உண்மைதான், அதற்காக வேண்டுமென்றே மெட்ராஸ்காரனை மட்டம் தட்டவேண்டும் என்று சொல்பவர் என்றும் அவரை ஒரேயடியாகச் சொல்லிவிடுவதும் சரியாக இருக்காதே.
நைனா சொன்னது எவ்வளவு சத்தியமான வார்த்தை. விமர்சனம் என்கிற பெயரில் ஆரம்ப நிலையில் இருப்பவனை அடித்துவிடக்கூடாது என்று மாக்ஸிம் கார்க்கி இளமையில் தனக்கு நேர்ந்ததாக எழுதியிருப்பதை வைத்து, காவியில் சந்தித்தபோது கி. ராஜநாராயணன் சொன்னது நினைவுக்கு வந்தது. அப்படியெல்லாம் கரிசனம் காட்டத்தேவையில்லை என்று தான் வாதிட்டது, இப்படித் தனக்கே எதிராக வந்து நிற்கும் என்று கனவுகூட காணவில்லையே. சே. இந்த நேரம் பார்த்து சுகுமாரனும் இல்லை. ஷங்கர் ராமனைப்போலவே நிச்சயம் இது சுகுமாரனுக்கும் பிடித்திருக்கும்.
Add Comment